யானை இறந்ததை ஓராண்டுக்கு பின் கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள்: கண்காணிப்பில் குறைபாடு?
யானை இறந்ததை ஓராண்டுக்கு பின் கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள்: கண்காணிப்பில் குறைபாடு?
ADDED : டிச 26, 2025 02:08 AM

சென்னை: கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில், ஒரு யானை இறந்தது, ஓராண்டுக்கு பின் வனத்துறை கவனத்துக்கு வந்திருப்பது, பிரேதப் பரிசோதனை ஆய்வு வாயிலாக அம்பலமாகி உள்ளது.
சமீப காலமாக, தமிழக வனப்பகுதிகளில் யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் விலங்குகள் இறந்தால், அதன் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், விலங்குகள் வேட்டையாடப்பட்டு இறந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து வழக்குப் பதிய வேண்டும்.
இதில் யானை, புலி ஆகிய விலங்குகள் இறந்தால், அது தொடர்பான தகவல்கள் முறையாக, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், யானை, புலிகள் இறப்பில், மத்திய அரசு கவனம் செலுத்தினாலும், தமிழக வனத்துறை அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.
வனப்பகுதியில், யானை, புலிகள் இறந்தால், அது குறித்து வேட்டை தடுப்பு காவலர்கள், ரோந்து செல்லும் போது தெரியவரும். ஒரு விலங்கு இறந்தால், சில நாட்கள் அல்லது அதிகபட்சமாக, ஒரு மாதத்துக்குள் வனத்துறை கவனத்துக்கு வந்துவிடும்.
இதில், கோவை சிறுமுகை வனச்சரக பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு யானை இறந்ததாக, வனத்துறை தகவல் வெளியிட்டது. ஒரு மாதத்துக்குள் அந்த யானை இறந்திருக்கலாம் என, அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த யானை ஓராண்டுக்கு முன் இறந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது, வனத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, பிரேதப் பரிசோதனை அடிப்படையில், சிறுமுகை வனச்சரகர், வனத்துறைக்கு அனுப்பிய அறிக்கை:
சிறுமுகை வனப்பகுதியில், யானை இறந்ததாக கூறப்பட்ட இடத்தில், 12 வயது ஆண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள், தந்தங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்த பாகங்களை தடய அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் ஆய்வு செய்ததில், ஓராண்டுக்கு முன்பே, அந்த யானை இறந்திருக்கும் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், ஒரு யானை இறந்தது, ஓராண்டு கழித்தே அதிகாரிகளுக்கு தெரியவந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வனத்துறையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள், என்ன நிலையில் இருக்கிறது என்பது, இதன் வாயிலாக தெரிய வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில், நடப்பாண்டு ஜனவரி முதல், டிசம்பர் வரை, 89 யானைகள் இறந்துள்ளன.
இதில், ஐந்து யானைகள் இறப்பு மட்டுமே, இயல்புக்கு மாறாக இருந்ததாக, பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில சம்பவங்களில், யானையின் உடல் பாகங்கள் கிடைக்காததால், பிரேதப் பரிசோதனை முழுமையாக நடக்கவில்லை. 'ட்ரோன்' உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

