கழிப்பறைக்கு சென்ற செவிலியர்களையும் வழிமறித்து கைது செய்த போலீஸ்
கழிப்பறைக்கு சென்ற செவிலியர்களையும் வழிமறித்து கைது செய்த போலீஸ்
ADDED : டிச 24, 2025 06:05 AM

சென்னை: இரவு நேரத்தில் கழிப்பறை மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று போராட்டத்திற்கு திரும்பிய செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, கூடுவாஞ்சேரி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆறாவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
துண்டிப்பு
அரசு தரப்பில் மூன்று முறை பேச்சு நடத்தியும், 8,322 பேரையும் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடர்வதாக, செவிலியர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் நடக்கும் ஆரம்ப சுகதார நிலையத்தில், கழிப்பறை கதவுகள் மூடப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு செவிலியர்கள் அருகே உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று, குளித்து விட்டு, போராட்ட இடத்திற்கு வந்துள்ளனர். அதேபோல், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று செவிலியர்கள் திரும்பினர்.
அப்படி திரும்பியவர்களை வழிமறித்து, போலீசார் கைது செய்தனர். அதன்படி, 300க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து, படப்பை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
மாலையில் அவர்களை விடுவிக்காமல், பஸ்சில் ஏற்றி, சேலம் உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களுக்கு அழைத்து சென்று, அங்கே இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. போராட்டம் நடத்திய அனைத்து இடங்களிலும் இருந்து செவிலியர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
நெருக்கடி
இதுகுறித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கச் செயலர் சுபின் கூறியதாவது: அரசு தொடர்ந்து பல வகையில் எங்களை அடக்கி வருகிறது. ஆனாலும், எங்கள் போராட்டம் தொடரும். கழிப்பறை சென்றவர்களை கூட, மடக்கி கைது செய்துள்ளனர். குறிப்பாக, கழிப்பறை கதவை தட்டி, வெளியே வர செய்து கைது செய்துள்ளனர்.
கைது செய்தவர்களிடம், சொந்த ஊர் பற்றி போலீசார் கேட்டுள்ளனர். யாரும் ஊர் பெயர் தெரிவிக்காததால், அவர்களே பல ஊர்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீசார் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

