விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு
விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு
ADDED : செப் 12, 2025 12:23 AM

சென்னை:'பணியின்போது, விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சென்னை அடையாரில், அமைச்சர் கணேசனை, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச்செயலர் ஜாஹிர் உசேன், துணைப் பொதுச் செயலர் அஸ்லாம் கான் மற்றும் நிர்வாகிகள் பலர் நேற்று சந்தித்து பேசினர்.
இது குறித்து, ஜாஹிர் உசேன் அளித்த பேட்டி:
அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியத்தில் வழங்கக்கூடிய பணப் பலன்களை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இருப்பது போல், பணியின்போது மரணம் அடையும் ஓட்டுநர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி ய மனு அளித்தோம்.
அவற்றை பரிசீலித்து, முக்கியமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.