ADDED : செப் 12, 2025 12:22 AM

சென்னை,:வங்கி கடன் மோசடி வழக்கில், 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முனாவர்கான் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள், சர்வதேச போலீசார் உதவியுடன், குவைத்தில் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த, 2011ம் ஆண்டு, முனாவர்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆறு பேர், பாங்க் ஆப் பரோடா வங்கியில், 3.50 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் தேடப்பட்ட முனாவர்கான் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.
இவர், குவைத்தில் பதுங்கி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2022ல், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இதையடுத்து, 'இண்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார் உதவியுடன், முனாவர்கானை தேடும் பணி நடந்து வந்தது.
சில தினங்களுக்கு முன், சி.பி.ஐ., மற்றும் என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சர்வதேச போலீசாரின் கூட்டு நடவடிக்கையாக, குவைத்தில் முனாவர்கான் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சட்ட ரீதியாக நாடு கடத்தும் பணி துவங்கியது. நேற்று அவர், விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.