காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவ கண்காணிப்பு அவசியம்
காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவ கண்காணிப்பு அவசியம்
ADDED : டிச 27, 2025 07:12 AM

சென்னை: கேரளாவில் பறவை காய்ச்சல் மற்றும் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் வருவோரை , மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: பறவை காய்ச்சலுக்கு உள்ளான கோழிகள், பிற பறவை இனங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. அதன் கழிவுகளில் இருந்து, மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளன. எனவே, இவ்வகை பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு, காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை உடனடியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை, மருத்துவமனைகள் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில், கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்துவதுடன், பாதிப்பு விபரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்துவதும் அவசியம்.
ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், பன்றிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், கால்நடைத் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

