சரக்கு வாகனத்துக்கு கண்காணிப்பு கருவி; அரசு உத்தரவுக்கு லாரி ஓனர்கள் எதிர்ப்பு
சரக்கு வாகனத்துக்கு கண்காணிப்பு கருவி; அரசு உத்தரவுக்கு லாரி ஓனர்கள் எதிர்ப்பு
ADDED : செப் 16, 2025 03:28 AM
சென்னை: 'சரக்கு வாகனங்களில், வி.எல்.டி.டி., எனப்படும் வாகன இருப்பிடத்தை அறியும் கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் என்பது தேவையற்றது' என, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், செயலர் காதர் மைதீன் ஆகியோர், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அறிவுறுத்தல் சரக்கு வாகனங்களில், ஏற்கனவே ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டியது, போக்கு வரத்து ஆணையரகத்தின் பணி.
தற்போது, தமிழக போக்குவரத்து ஆணையரகம், 'தமிழகத்தில் உள்ள அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும், வி.எல்.டி.டி., எனப்படும் வாகன இருப்பிடம் கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்து, அந்த நிறுவனத்திடம் கருவி வாங்க வேண்டும் என்கின்றனர்.
தேவையற்றது இக்கருவி பயணியர் வாகனங்களுக்கு மட்டும் போதுமானது. சரக்கு மற்றும் இலகுரக வாகனங்களுக்கு தேவையற்றது. ஏனெனில், ஏற்கனவே எங்கள் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்று, வி.எல்.டி.டி., கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.