தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா; காங்., நிர்வாகி கவலை
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா; காங்., நிர்வாகி கவலை
UPDATED : செப் 19, 2025 03:03 PM
ADDED : செப் 19, 2025 12:39 PM

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில், சமீபகாலமாக கூட்டணி ஆட்சி கோஷம் அதிகரித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதியை பெற வேண்டும் ஆட்சியில் அதிகாரம் பெற வேண்டும் என தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மேலிடம் கூட்டணி ஆட்சி குறித்து எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் தமிழக காங்கிரசில் கூட்டணி ஆட்சி கோஷம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டணி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம் என்றும் இது குறித்து டில்லி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் கே விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி போன்றோர் பொது வழியில் பத்திரிகை வாயிலாக ஆட்சியில் பங்கு தேவை எனபதும் கூட்டணியில் அதிக இடங்கள் தேவைஎன்று கருத்து சொல்வது நமது கட்சியிலும் கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது வேகமாக செயல்பட்டு வரும் மாநில காங்கிரஸ
தலைமையை பலவீனபடுத்தும் மறைமுக செயலாகும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் கூட்டணியை பற்றியும் எத்தனை இடங்கள் தேவை என்பதை முடிவு செய்கின்ற அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு
மட்டுமே உண்டு. இவர்கள் கூறுகின்ற கருத்தை கட்சியின் மேலிடத்தில் கூறலாம்.
தேர்தல் வருவதற்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து சரியான முடிவுகளை எடுக்கும். சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழக காங்கிரசை பலப்படுத்தி
பெரும் வெற்றியை நமது தலைவர் ராகுல்ஜியிடம் அளிப்போம்
என உறுதி ஏற்போம். இவ்வாறு கே. விஜயன் கூறியுள்ளார்.