ADDED : டிச 28, 2025 02:49 AM

-- நமது நிருபர் -
என்னோடு நேருக்கு நேர் மேடையேறி விவாதிக்க தயாரா' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சவால் விடுக்க, அதற்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாத முதல்வர் ஸ்டாலின், தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வாயிலாக, 'சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பகிரங்க சவால் தேவையா' என கேட்டுள்ளார். இருவரும் மாறி மாறி வெளியிட்ட அறிக்கை:
ரகுபதி
கள்ளக்குறிச்சியில் பகிரங்க சவால் விடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தருவதாக நினைத்து, பழனிசாமி உளறிக் கொட்டியிருக்கிறார். தி.மு.க., அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், முழித்துக் கொள்வதும், மத்திய அரசு விவகாரமாக இருந்தால் கண்ணை மூடிக் கொள்வதும் என, அவரது செயல்பாடு உருமாறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா; பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்து விடுமா; அந்தக் குழந்தைக்கு சத்தான உணவைத் தர வேண்டாமா?
மாவட்டத்தை உருவாக்கினால், அதை நிர்வகிக்க கட்டடம் வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.
'அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுகிறோம்' என்கிறார் பழனிசாமி. 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, தனியாரும் தன்னார்வலர்களும் அளித்த நிவாரணப் பொருட்களில், ஜெயலலிதாவின் படத்தை, அ.தி.மு.க.,வினர் ஒட்டினர், சூட்கேஸ், குதிரை, குழந்தை, மணமக்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஸ்டிக்கர் ஒட்டி, தமிழகத்தின் மானத்தை அகில உலகிற்கும் காட்டியவர்களுக்கு எப்போதும் ஸ்டிக்கர் பற்றிய நினைப்பு தான் இருக்கும்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கிரானைட் கொள்ளை, கோடநாடு கொலைகள், கூவத்துார் கூத்துகள், மவுலிவாக்கம் கட்டட விபத்து, மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டம், தர்மபுரி கலவரம், சாத்தான்குளம் இரட்டை மரணம், நிர்மலாதேவி விவகாரம், ஜல்லிக்கட்டு போராட்டம் என, அ.தி.மு.க., ஆட்சியில் சந்திசிரித்தது.
ஆனால், சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் பழனிசாமி கூறுகிறார். 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று சொன்னதும், பழனிசாமியின் அடிவயிறு எரிகிறது.
ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை, தி.மு.க., அரசு தொடர்கிறது. ஆனால், பழனிசாமி ஆட்சியில், 2019 வரை மட்டுமே அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினர். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தையே முடக்கி விட்டு எகத்தாளமாக பேசுகிறார்.
'என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?' என பழனிசாமி கேட்டிருக்கிறார்.
இதற்கு மேடை போட தேவையில்லை. சட்டசபையில் நேருக்கு நேர் பேசலாமே. அங்கே முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், வெளிநடப்பு என புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு பகிரங்க சவால் என பீலா தேவையா ?
பழனிசாமி
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் மேடையேறிய முதல்வர் ஸ்டாலின், எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். அவர் மேடை போட்டு பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டமே, என் தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் தான் உருவானது. அவர் நின்று பேசிய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை சொல்லும்.
அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களுக்கு, 'ரிப்பன்' வெட்டி, 'ஸ்டிக்கர்' ஒட்டுவதையே, 95 சதவீதம் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்; அவருக்கு 5 சதவீத திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க கொஞ்சம் கூட தகுதி இல்லை.
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என, அனைவரும் நடுத்தெருவில் போராடி வருகின்றனர்.
ஆனால், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், சட்டை காலரை துாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
இருபது லட்சம் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' என போகிற போக்கில் அளந்து விட்டால், தமிழக மக்கள் நம்பி விடுவரா; எத்தனை 'லேப்டாப்' யாருக்கு போய் சேர்ந்தது? நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல், தேர்தல் பயத்தால், தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமையாக பேசுவதற்கு கூச்சப்பட வேண்டும்.
மொபைல் போன் ரீசார்ஜ் செய்தாலே, ஓராண்டுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த சந்தா இலவசமாக கிடைக்கிறது. அதே ஏ.ஐ., சந்தாவை ஆறு மாதத்திற்கு வழங்கப் போவதாக, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. இது ஏமாற்று வேலை இல்லையா?
முதல்வர் ஸ்டாலின் மூச்சிரைக்க வாசித்த பட்டியல் என்பது, அவர் நடத்திய 'போட்டோ ஷூட்'களின் பட்டியல். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதையும், வாசிக்கத் தயாரா?
எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். ஆனால், பல ஆண்டு களாக உங்களுக்கு நான் வைத்த சவால் நிலுவையில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் என்னோடு, நேருக்கு நேர் மேடை ஏறி விவாதிக்க தயாரா?
அ.தி.மு.க., ஆட்சி பற்றி, அவர் என்ன கேட்டாலும் பதில் சொல்ல நான் தயார். தி.மு.க., ஆட்சி பற்றி என் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயாரா? முதல் கேள்வியாக, 'நீட்' தேர்வு ரத்து என்ன ஆச்சு என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

