திருப்பூர் புது மணப்பெண் தற்கொலை வழக்கு விசாரணையை மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு
திருப்பூர் புது மணப்பெண் தற்கொலை வழக்கு விசாரணையை மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு
ADDED : செப் 09, 2025 05:42 AM

சென்னை : திருப்பூரைச் சேர்ந்த புது மணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை, வேறு அமைப்புக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 'போலீசார் உரிய குற்றப் பிரிவுகளை சேர்க்காவிட்டால், விசாரணை நீதிமன்றம் அந்த பிரிவுகளை சேர்த்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டி புதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை; தொழிலதிபர். இவரது மகள் ரிதன்யா திருமணமான இரண்டரை மாதத்தில், கடந்த ஜூன் 28ல் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, சேவூர் போலீசார் கைது செய்தனர்.
சந்தேக மரணம் 'வழக்கு விசாரணையை, சுதந்திரமான அதிகாரி, சி.பி.ஐ., அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், இறந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், கடும் எதிர்ப்பை அடுத்து, வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு துாண்டியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை.
விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விசாரணையை மாற்ற வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'சம்பவம் நடந்து 72 நாட்களாகியும், இன்னும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர் என்பதற்கு ஆதாரமாக, ஆடியோ தகவல்களை வழங்கி உள்ளோம்.
இறுதி அறிக்கை மொபைல் போனில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆடியோ தகவல்களை, போலீசார் பொது வெளியில் கசிய விட்டுள்ளனர்' என குற்றம் சாட்டப்பட்டது.
காவல் துறை தரப்பில், 'ஆடியோ தகவல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதன் அறிக்கை கிடைத்ததும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.
இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார், ''தடயவியல் அறிக்கையை பெற்ற பின், கூடுதல் பிரிவுகளுடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை, மாவட்ட எஸ்.பி., கண்காணிக்க வேண்டும்.
விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதால், தற்போது விசாரணையை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. மாறாக, அது விசாரணையை தாமதப்படுத்தும்.
''இறுதி அறிக்கையில், போலீசார் உரிய குற்றப் பிரிவுகளை சேர்க்காவிட்டால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் போது, விசாரணை நீதிமன்றம் அந்த பிரிவுகளை சேர்த்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார்.