ADDED : செப் 15, 2025 06:34 AM

சென்னை:'தமிழகத்தில் வேலுார், சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை பாரிமுனை பகுதியில், அதிகபட்சமாக 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, சென்னை மாவட்டம், கொளத்துாரில், தலா, 9; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், 8; சென்னை பெரம்பூர், வில்லிவாக்கத்தில் தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், நாளை முதல் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலுார், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.