அமைச்சர், மகன், மகள் வீடுகளில் பறிமுதல் செய்த ஆவணங்கள் ஆய்வு; அமலாக்கத்துறை அறிவிப்பு
அமைச்சர், மகன், மகள் வீடுகளில் பறிமுதல் செய்த ஆவணங்கள் ஆய்வு; அமலாக்கத்துறை அறிவிப்பு
ADDED : ஆக 19, 2025 02:35 AM

சென்னை: 'அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன்கள், மகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு பணி நடக்கிறது' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த ஐ.பெரியசாமி, கடந்த 2006 - 2010ம் ஆண்டு வரை, வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர், குடும்ப உறுப்பினர்கள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக, 2 கோடி 1 லட்சத்து 35,000 ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2012ல், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசிலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஐ.பெரியசாமியிடம், 11 மணி நேரம் விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தற்போது, ஐ.பெரியசாமி, தி.மு.க., அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார். அவரது மகன் செந்தில்குமார், பழனி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இளையமகன் பிரபு, திண்டுக்கல் மாவட்டத்தில், 'ஸ்பின்னிங் மில்' நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகள் இந்திராணி, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மண்டல அமலாக்கத் துறை சார்பில், அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில் குமார் மற்றும் பெரியசாமியின் இளையமகன் பிரபு நடத்தி வரும் இருளப்பா மில்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, பெரியசாமி மகள் இந்திராணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில், பெரியசாமி, அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 'டிஜிட்டல்' ஆவணங்களும் சிக்கி உள்ளன; அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.