தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்
தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்
ADDED : ஆக 19, 2025 02:51 AM

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, பார்லிமெடில், 'இம்பீச்மென்ட்' எனப்படும், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசனையை துவங்கியுள்ளன.
'ஓட்டு திருட்டு' குற்றச்சாட்டை மையமாக வைத்து, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக முடக்கி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தேர்தல் கமிஷன் மீது தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
மன்னிப்பு
குறிப்பாக, கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, சில புள்ளிவிபரங்களையும் கடந்த வாரம் வெளியிட்டார். அதோடு, 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், பீஹார் முழுதும், 16 நாள் சுற்றுப்பயணத்தையும் துவங்கியுள்ளார்.
இந்நிலையில், 'ஓட்டு திருட்டு புகார் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஏழு நாட்களுக்குள் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்டு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த புகார் ஆதாரமற்றவை என்று அர்த்தம்.
இதுபோன்ற அபாண்ட குற்றம் சுமத்தியதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமான நிலையில், பார்லிமென்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரு சபைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் ஆதரவுடன், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய முடியும். அதற்கு தேவையான பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.
நெருக்கடி
அது தெரிந்தும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர காரணம், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரை குறி வைத்து, தலைமை தேர்தல் கமிஷனர் அதிரடியாக பேசத்துவங்கி இருப்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவருக்கு நெருக்கடி அளிக்கவும், எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.
சபை விதிகளின்படி நடக்காமல், ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கருக்கு எதிராக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
தற்போது, தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக அதே பாணியை கையில் எடுத்துள்ளன.
- நமது டில்லி நிருபர் -