பதிவு தபால் சேவை ரத்து; ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு
பதிவு தபால் சேவை ரத்து; ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 30, 2025 06:22 AM

மதுரை: தபால் துறையில் நவீனமாக்கலின் ஒரு பகுதியாக செப்., முதல், பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தபால் துறையில் சாதாரண தபால் அனுப்பும்போது அது போய் சேர்ந்ததா, இல்லையா என உறுதிசெய்ய முடியாது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவு தபால் முறை நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த முறையின்படி, தபால் உரியவரிடம் சேர்ந்ததும், அவர் கையெழுத்துடன் ஒப்புகை சீட்டு நம் கைக்கு வந்துவிடும். தபாலின் எடையை கணக்கிட்டு பதிவு தபாலுக்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, உடனடியாக 'டெலிவரி' என்ற அடிப்படையில் ஸ்பீடு போஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், பதிவு தபால் போன்றது என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
பதிவு தபாலை விட ஸ்பீடு போஸ்ட் முறைக்குதான் தற்போது வரவேற்பு அதிகம் உள்ளது.
இதை கருத்தில்கொண்டு, செப்., முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. அதுபோல் ரயில் மெயில் சேவையும் ரத்தாகிறது.
இனி, இந்தியாவிற்குள் தரைவழியாக மட்டுமே தபால்கள் பிற மாநிலங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது. பதிவு தபால், ஆர்.எம்.எஸ்., சேவை ரத்துக்கு தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பரிவர்த்தனை இல்லை தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், பயன்பாட்டில் உள்ள மென்பொருளை, புதிய தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தும் பணிகள் ஆக., 2ல் நடக்கவுள்ளன.
அன்று ஒரு நாள், அனைத்து தபால் அலுவலகங்களிலும், சிறுசேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற எந்தவிதமான பண பரிவர்த்தனைகளும், விரைவு தபால், பதிவு தபால், ஆதார் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்ய இயலாது என, தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.