மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் நாகையில் தி.மு.க., பிரமுகர் கைது
மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் நாகையில் தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 30, 2025 06:29 AM

சென்னை : நாடு முழுதும், 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் சப்ளை செய்து வந்த, நாகை மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், 'புல்லட்' மகாலிங்கம், மஹாராஷ்டிரா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 63; தி.மு.க., பிரமுகர். இவரை, 'புல்லட்' மகாலிங்கம் என, அழைக்கின்றனர்.
வீட்டில் சோதனை ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அதேபோல, மகாலிங்கத்தின் மகன் அலெக்ஸ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இவர்கள் நாடு முழுதும் மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, கடந்தாண்டு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலைய போலீசாரால் மகாலிங்கம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.
2023ல், டில்லியில் வேன் ஒன்றில் மெத் ஆம்பெட்டமைன் கடத்திய வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், மகாலிங்கத்தின் கூட்டாளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த என்.சி.பி., அதிகாரிகள், விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் சோதனை செய்தனர்.
அதேபோல, கடந்தாண்டு ஏப்ரலில் தஞ்சாவூரில் இருந்து, புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் கடத்திய போது, என்.சி.பி., எனப்படும், சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், அலெக்ஸ் கைது செய்யப்பட்டார்.
இவரிடம், 2 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
என்.சி.பி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பல கோடி ரூபாயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும், வெளிநாடுகளில் முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோருக்கு சொந்தமான, 7.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளனர்.
கமிஷன் இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 43 கிலோ மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் தொடர்பாக, யோகேஷ் என்பவரை பிடித்து, அம்மாநில போலீசார் விசாரித்துள்ளனர்.
கடத்தலுக்கு பின்னணியில் மகாலிங்கம் இருப்பது தெரியவந்தது. இவர், போதைப் பொருள் கடத்தலுக்காக, 10 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்த தகவலும் தெரியவந்தது.
இதையடுத்து, நாகப்பட்டினம் சென்ற மஹாராஷ்டிரா போலீசார் நேற்று, மகாலிங்கத்தை கைது செய்து, அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.