முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி
முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி
UPDATED : டிச 27, 2025 05:38 PM
ADDED : டிச 27, 2025 05:33 PM

சிவகங்கை: முதல்வருக்கு வேலைப்பளு அதிகம், எனவே இபிஎஸ்சுடன் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது என்று திமுக எம்பி கனிமொழி கூறி உள்ளார்.
கீழடியில் அவர் அளித்த பேட்டி;
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம். பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் உறுதி செய்யப்படவில்லை. 40 நாள் வேலைத்திட்டம் என்பதே அதிகபட்சமாக இருந்தது.
இந்த திட்டத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்ற மாநில அரசின் உரிமை கூட பறிக்கப்பட்டு உள்ளது. முழு ஊதியத்தையும் மத்திய அரசு தான் வழங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், அதையும் 60-40 சதவீதம் என்ற அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்த திட்டத்தையே முடித்து விடுவதற்காக தடுத்து விடுவதற்காக செய்யப்பட்ட மாற்றங்களாக பார்க்கிறோம்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளதாரத்தை பாதிக்கக்கூடிய ஒரு சூழலை நாடு முழுவதுமே உருவாக்கிவிடும். அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யார் என்று நமக்கு நல்லாவே தெரியும். உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் தான் இபிஎஸ்.
முதல்வருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில் இவரோடு (இபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) எல்லாம் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது. கட்சியிலே எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவருடன் (இபிஎஸ்சுடன்) விவாதிக்க தயாராக இருப்பார்கள். அவர்களோடு விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் முதல்வர் நிச்சயமாக பதில் அளிப்பார்.
இவ்வாறு கனிமொழி பேட்டி அளித்தார்.

