சுரங்க திட்டங்கள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சுரங்க திட்டங்கள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : செப் 12, 2025 06:42 PM

சென்னை: சுரங்க திட்டங்கள் விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்க தேவையில்லை என்ற முடிவை கைவிடுமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்;
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின்மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணை பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள் சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன. அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன.
மேலும் இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன. கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன. இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது. எனவே. உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுகிறது.
1997ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொதுமக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்கிறேன். இந்த பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.
இந்தப் பாதுகாப்பு 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்களிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும். இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் பார்லிமெண்டிலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும்.
மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும்.
இவற்றை கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.