தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலர், ஏடிஜிபி ஆஜர்
தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலர், ஏடிஜிபி ஆஜர்
UPDATED : டிச 17, 2025 04:03 PM
ADDED : டிச 17, 2025 03:38 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தலைமைச்செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக காணொளி மூலம் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜரானார்கள். அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச்செயலர் அவகாசம் கோரிய நிலையில், வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.'இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால், 'கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.இதை அவசர வழக்காக டிசம்பர், 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'உச்சிப் பிள்ளையார் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிசம்பர், 4ல் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.
இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் 'தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார். அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச்செயலர் அவகாசம் கோரினார். தொடர்ந்து வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

