100 நாள் வேலை திட்டம்; ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? அதிமுகவிடம் கேட்ட முதல்வருக்கு அண்ணாமலை பதில்
100 நாள் வேலை திட்டம்; ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? அதிமுகவிடம் கேட்ட முதல்வருக்கு அண்ணாமலை பதில்
ADDED : டிச 17, 2025 03:28 PM

சென்னை: 100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என, மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு மசோதாவை பார்லியில் தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த புதிய சட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என முதல்வர் ஸ்டாலின் இபிஎஸ்க்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நேற்றைய நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை 100 நாள் வேலை திட்டம் குறித்து அளித்த விளக்கத்தை வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண். 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதல்வர் ஸ்டாலினால் முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

