தேசிய கட்டட விதிகளில் மாற்றம்; மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்
தேசிய கட்டட விதிகளில் மாற்றம்; மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்
UPDATED : டிச 20, 2025 12:05 PM
ADDED : டிச 20, 2025 06:23 AM

சென்னை: 'என்.பி.சி., எனப்படும், தேசிய கட்டட விதிகளை மாற்றி அமைப்பதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்' என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. இதேபோன்று, ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கான கட்டட விதிகளை வகுத்துள்ளன. இந்த விதிகளின் அடிப்படையிலேயே கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், தேசிய அளவிலான கட்டட விதிகள், என்.பி.சி., என்ற பெயரில், மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ளன. கட்டடங்களின் பாகங்கள், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அதற்கான தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் இதில் அடங்கி இருக்கும்.
இந்திய தர நிர்ணய அமைப்பு வாயிலாக, இந் த விதிகள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக, 2016ல் தேசிய கட்டட விதிகள் புதுப்பிக்கப்பட்டன. தற்போது, இதை புதுப்பிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி, தேசிய கட்டட விதிகள் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதில், கட்டுமான திட்ட அனுமதி நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நில நடுக்க அபாயம் உள்ள பகுதிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, புதிய வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
தேசிய கட்டட விதிகளை புதுப்பிக்கும் பணியில், அதற்கான வரைவு சுற்றுக்கு வந்துள்ளது. அதில், நிர்வாக நடைமுறைகள் மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உதாரணமாக, தமிழக அரசின் பொது கட்டட விதிகள் அடிப்படையில், 59 அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் மட்டுமே, உயரமான அடுக்குமாடி கட்டடங்களாக கருதப்படும். ஆனால், தேசிய கட்டட விதிகளில், 49 அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள், உயரமானவை என, வகைப் படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற வேறுபாடுகள் களையப்பட்டு, கட்டட உயரம் உட்பட பல்வேறு அளவுகள், வகைப்பாடுகள் விஷயத்தை, மாநில அரசுகளே இனி முடிவு செய்ய அதி காரம் அளிக்கப்பட்டுள்ளது. தரம், பாதுகாப்பு விஷயங்கள் மட்டும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். பிற விஷயங் கள், மாநில அரசின் கட்டுப் பாட்டுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

