திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் பிரியாணி: திருப்பி அனுப்பப்பட்ட கேரள குடும்பத்தினர்
திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் பிரியாணி: திருப்பி அனுப்பப்பட்ட கேரள குடும்பத்தினர்
UPDATED : டிச 26, 2025 08:01 PM
ADDED : டிச 26, 2025 07:59 PM

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு, சிக்கன் பிரியாணி உட்பட அசைவ உணவு எடுத்து செல்ல முயன்ற, கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினரை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கடந்தாண்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வைத்து வெட்ட, ஆட்டுடன் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் நிறுத்தினர். பின், எம்.பி., நவாஸ்கனியுடன் சென்றவர்கள், மலை படிக்கட்டுகளில் அமர்ந்து, அசைவ பிரியாணி சாப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. அதன்பின் பிரியாணி கொண்டு சென்ற குடும்பத்தினரை, போலீசார் திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பல போராட்டங்கள் நடந்தன. 'மலையில், ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழிகள் பலியிட தடை விதித்தது.
டிச., 3ல், 'மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, தீபம் ஏற்றப்படவில்லை. இதைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இது தொடர்பான மேல்முறையீட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணையில் உள்ளன. டிச., 3 கார்த்திகை நாளன்று மலை மீது வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகேயுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் டிச., 21 வரை மலை மீது செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் சந்தனக்கூடு விழாவுக்காக டிச., 21ல் கொடியேற்றப்பட்டது. டிச., 22 முதல் அனைவரும் மலைக்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள குடும்பம்
இந்நிலையில், காலை, கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மலை மீதுள்ள தர்காவுக்குச் செல்ல வந்தனர். அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களது பைகளை பரிசோதித்தனர். அதில் அசைவ உணவுகள், சிக்கன் பிரியாணி உள்ளிட்டவை இருந்தன. இதனால் அக்குடும்பத்தினரை போலீசார் திருப்பி அனுப்பினர்.

