இஸ்ரேலில் இரண்டு பேரை கொன்ற பாலஸ்தீனியரால் பதற்றம்
இஸ்ரேலில் இரண்டு பேரை கொன்ற பாலஸ்தீனியரால் பதற்றம்
ADDED : டிச 26, 2025 08:18 PM

ஜெருசலேம்: கடந்த சில மாதங்களாக போர் ஓய்ந்து இருந்த நிலையில், பாலஸ்தீனத்தை சேர்ந்தவர், இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேரை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தரைவழியாகவும், வான் வெளியாகவும் நடந்த இந்தத் தாக்குதல் ஓராண்டுக்கு மேல் நீடித்தது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் தலையீட்டுக்கு பிறகு இரு தரப்புக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் பெயிட்ஷியான் பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் காரில் வேகமாக வந்து மக்கள் மீது மோதினார். அதில் 68 வயதான முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர் ஒருவர் காயமடைந்தார். பிறகு பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் காரில் இருந்து இறங்கி நெடுஞ்சாலை பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவரை சுட்டுக் கொன்றார். இதனை பிறகு அபுலா என்ற இடத்திற்கு சென்ற அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர் பாலஸ்தீனத்தின் குயாபதியா நகரை சேர்ந்தவர் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
காட்ஸ் கூறுகையில், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க உடனடியாகவும், வலிமையாகவும் செயல்பட வேண்டும் என ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் தாக்குதல் நிறுத்திய பிறகு, காசா நகரை நோக்கி மக்கள் திரும்ப துவங்கிய நிலையில், பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

