விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
ADDED : செப் 22, 2025 01:44 PM

நெல்லை; நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் பேசினார். அப்போது, அண்மையில் சுற்றுப்பயணம் சென்ற தவெக தலைவர் நடிகர் விஜய், திமுக பற்றியும், முதல்வர் ஸ்டாலினை சார் என்று அழைத்தது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அப்பாவு அளித்த பதில் வருமாறு;
நம்ப தம்பி, நடிகர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் அவர் பேசுவதை நீங்களே பார்க்கும் போது சிஎம் சார் என்று சினிமாவில் பேசுவது மாதிரி பேசுகிறார்.
கொஞ்சம் அகந்தை அதிகமாக வார்த்தைகளில் இருக்கிறது. இந்த அகந்தை இருக்கக்கூடாது. என்ன தைரியத்தில் இந்த அகந்தை வருகிறதோ தெரியவில்லை.
கட்சி ஆரம்பிக்கச் சொல்லி புஸ்சி ஆனந்துக்கு அமித் ஷா சொல்லி, அதன் மூலமாகத் தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வருமான வரித்துறையில் பழைய இணை ஆணையர் அருண்ராஜ், அவரிடம் (நடிகர் விஜய்) இருக்கிறார். அவரின் தொடர்பில் அமித்ஷா, பிரதமர் வழிகாட்டுதலில் கட்சி ஆரம்பித்ததாக பல பத்திரிகைகளில், ஊடகங்களில் செய்திகள் சொல்லி வருகின்றன.
அவர்கள் தான் இவர் (நடிகர் விஜய்) கேட்காமலே ஒய் பாதுகாப்பு பிரிவு கொடுத்திருப்பதாக செய்திகளில் சொல்கின்றனர். மத்திய அரசு மூலமாக தனி விமானமே கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால் எனக்கு தெரியவில்லை. அவர்கள்(பத்திரிகைகள், ஊடகங்கள்) சொன்னதை தான் நான் சொல்கிறேன்.
எனவே பின்புலத்தில் அவர்கள்(பாஜ) இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் அந்த அகந்தையில் பேசுவது மாதிரி பலரும் சொல்கின்றனர். அதற்கு உதாரணம்.. நான்(விஜய்) ஒரு பிரசாரத்திற்கு வருகிறேன் என்றால் எனக்கு இவ்வளவு கண்டிஷன்கள் காவல்துறையினர் போடுகின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இப்படி நீங்கள்(தமிழக அரசு) கண்டிஷன் போட முடியுமா? சிஎம் சார் போட்டு தான் பாருங்களேன்? என்று சொன்னதில் இருந்தே தெரிகிறது அவர்கள்(பாஜ) தான் இவரை(நடிகர் விஜய்) இயக்குகிறார்கள் என்று. அந்த வார்த்தையிலே அர்த்தம் இருக்கிறது.
அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லையோ என்று நான் நினைக்கிறேன். பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் மற்றும் உங்களின் புரோட்டோகால் (protocol) என்ன? பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, முதல்வரையோ பேசும் போது கண்ணியக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே என்றுதான் சொல்ல வேண்டும். மாண்புமிகு பாரத பிரதமர் என்றுதான் சொல்ல வேண்டும். மாண்புமிகு உள்துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை பெயரைச் சொல்லி அழைப்பதற்கோ, சினிமாவில் டயலாக் பேசுவது போல பேசுவதையோ மக்கள் விரும்பவில்லை.
ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார், ஏன் இப்படி புரியாமல் பேசுகிறார் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேட்டியில் கூறினார்.
பேட்டியின் போது, அப்பாவு எங்கேயும் நடிகர் விஜய் என்றோ, தவெக தலைவர் விஜய் என்றோ அவரது பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக அவர் என்றும், அந்த தம்பி என்றும் குறிப்பிட்டேச் சொன்னார் என்பது கவனிக்கத்தக்கது.