ADDED : டிச 27, 2025 07:23 AM

சென்னை: பிரதமர் மோடிக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 1987 ஜூலை 29ல், இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 'தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டும்' என கூறப்பட்டது. ஆனால், இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை.
இப்போது, இலங்கையில் ஒற்றை ஆட்சியை உறுதி செய்யும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சியில், அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், இலங்கை தமிழர்களுக்கு, இனி எக்காலத்திலும், அரசியல் அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்காது.
இது ஒவ்வொரு ஈழத்தமிழரின் மனதிலும் உறங்கிக் கொண்டிருக்கும், ஈழ விடுதலைப்போர் உணர்வுகளை துாண்டி விடும். அது இலங்கையின் எதிர்காலத்திற்கு, எல்லா வழிகளிலும் பாதகமானதாகவே அமையும். இதை இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது.
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்படுத்த, இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசின் சதியை முறியடிக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

