துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது: ஐகோர்ட்டில் அரசு தகவல்
துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது: ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : செப் 12, 2025 07:46 AM

சென்னை: துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி முடிவை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை, ஆக.,13 நள்ளிரவில் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசார், துாய்மை பணியாளர்களை தாக்கி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதோடு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஜோதி என்பவர் உட்பட 12 பெண் துாய்மை பணியாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, ''போராட்டத்தில் 1,400 பெண்கள் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க, 200 பெண் காவலர்கள் அழைத்து வரப்பட்டனர். துாய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது, கட்டுப்பாடுடன் செயல்படும்படி, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதை மீறி, போலீசார் அத்துமீறி உள்ளனர்,'' என்றார்.
இதை மறுத்த, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மீது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தாக்குதல் நடத்தினர்.
''போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்து, துாய்மை பணியாளர்களை தவறாக வழிநடத்தி, தாக்குதலை நடத்தியது. பேருந்துகளையும் சேதப்படுத்தி உள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன,'' என்றார்.
இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தும்போது, இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது புதிதல்ல' எனக்கூறிய நீதிபதிகள், 'நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை' என, கேள்வி எழுப்பினர்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும்போது, அதுகுறித்து ஓட்டளித்தவர்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுக வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் முறையான அனுமதி பெற்று, போராட்டங்களை நடத்த வேண்டும்.
இது தொடர்பாக, அனைத்து ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.