போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல்: தவறுதலாக நடந்திருக்கலாம் என்கிறார் அதிபர் டிரம்ப்
போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல்: தவறுதலாக நடந்திருக்கலாம் என்கிறார் அதிபர் டிரம்ப்
ADDED : செப் 12, 2025 07:53 AM

வாஷிங்டன்: போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் தவறுதலாக நடந்திருக்கலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. போலந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு பங்களிக்கும் வகையில் மூன்று ரபேல் ஜெட் விமானங்களை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டார்.
அவர், '' ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை. ரஷ்யாவின் வளர்ந்து வரும் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்' என தெரிவித்தார். போலந்தின் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, ''இது ரஷ்யாவின் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாகும்'' என குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து போலந்து பார்லிமென்டில் பிரதமர் டொனால்ட் டஸ்க் பேசியதாவது: போலந்து போரில் ஈடுபடவில்லை என்றாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு நிலைமை மிகவும் ஆபத்தானது, என்றார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடையவில்லை. அது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். டிரோன் தாக்குதல் தவறுதலாக நடந்திருக்கலாம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.