ADDED : செப் 23, 2025 06:13 AM

சென்னை: 'நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவு அளிப்போர் மீது தாக்குதல் நடந்தால், போலீசார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பர்' என, 'புளுகிராஸ்' அமைப்பு நிர்வாகிக்கு, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் கடிதம் அனுப்பி உள்ளார்.
நாய்களுக்கு உணவு அளிப்போர் மீது, தனி நபர்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடியிருப்பு நல சங்கத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர் .
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, காவல் நிலைய போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனுக்கு, விலங்குகள் நல அமைப்பான புளுகிராஸ் நிர்வாகி, கடந்த மாதம், 28ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து, பொறுப்பு டி.ஜி.பி., அனுப்பியுள்ள கடிதம்:
நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் மீதும், அவற்றுக்கு உணவு அளிப்போர் மீதும் தாக்குதல் நடந்தது தொடர்பாக புகார் பெறப்பட்டால், போலீசார் கட்டாயம் நட வடிக்கை எடுப்பர். அதுபற்றி விசாரணை நடத்துவர்.
இதற்காக, தனியாக அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.