ADDED : டிச 25, 2025 06:24 AM

சென்னை: 'எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களுக்கு 30 நாளுக்கும் பணி வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் என, சட்டசபையில் பேசிய, ஸ்டாலின், முதல்வர் ஆனதும் அதை மறந்துவிட்டார்' என, ஊர்க்காவல் படையினர் குற்றஞ்சாட்டினர்.
தமிழக காவல் துறையின் கீழ், தன்னார்வலர்களாக, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர்.
புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள், பண்டிகை காலங்களில் போக்குவரத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு மாதம், 2,800 ரூபாய் கிடைக்கும் வகையிலேயே பணி ஒதுக்கப்பட்டு வந்தது.
இதனால், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், போலீசாருக்கு ஒரு நாள் ஊதியத்தை கணக்கிட்டு, ஊர்க்காவல் படையினருக்கு வழங்க உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றமும், ஊர்காவல் படையினருக்கு, ஒரு நாளைக்கு, 560 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தில் ஊர்காவல் படையினருக்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சியில், மாதம் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது.
இரண்டு ஆட்சிகளிலும், மாதத்திற்கு, 2,800 ரூபாய் மட்டுமே கிடைக்கும் வகையில் பார்த்து கொள்ளப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஊர்காவல் படையினர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மாதம் 30 நாட்களும் பணி வழங்க வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

