வெங்கடேசன் சுட்ட 44 'வடைகள்' மக்களுக்கு நல்லதல்ல மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் 'கலகல' பேட்டி
வெங்கடேசன் சுட்ட 44 'வடைகள்' மக்களுக்கு நல்லதல்ல மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் 'கலகல' பேட்டி
ADDED : ஏப் 04, 2024 05:57 AM

டாக்டர் தொழில் இருக்க அரசியல் ஆர்வம் ஏன்
நான் தொடர்ச்சியாக டாக்டராக பயணிக்கும்போது மக்களுக்கு சில நல்ல விஷயங்கள்தான் செய்ய முடிகிறது. இதுவே அதிகாரம் இருந்தால் கூடுதலாக மக்களுக்கு செய்யலாமே. அதனால் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.
ம.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., அ.தி.மு.க., என ஏன் இந்த நிலையில்லாத நிலைப்பாடு
என் நிலைப்பாடு மக்கள் சேவையே மகேசன் சேவை. நான் இருந்த கட்சிகளின் தொண்டர்களை கேட்டாலே எனது சேவை பற்றி கூறுவார்கள். என் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும்போதுதான் கட்சிகளில் இருந்து வெளியேறினேன். இவ்விஷயத்தில் நான் பொறுமை காத்தேன். ஒருகட்டத்தில் பொறுமைக்கும் எல்லை உண்டு என வெளியேறினேன். நான் எதையும் எதிர்பார்த்து அ.தி.மு.க.,வில் சேரவில்லை.
அ.தி.மு.க.,வில் சேர்ந்தது காலம் கடந்த முடிவா
ஆமாம். ஜெயலலிதா இருக்கும்போதே முயற்சித்தேன். முடியவில்லை. தி.மு.க., உட்பட மற்ற கட்சியினரும் அப்போது என்னை அழைத்தார்கள். இப்போது அ.தி.மு.க.,வில் திருப்தியாக பணியாற்றி வருகிறேன்.
'சர்வகட்சி சரவணன்' என்பதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்.
மக்கள் 'பாசிட்டிவ்' ஆக எடுத்துக்கொள்கிறார்கள். அந்த கட்சிகள்தான் என்னை இழந்துவிட்டன என்ற உணர்வு அந்தந்த கட்சி தொண்டர்களிடம் உள்ளது.
வெற்றி பெற்றால் மதுரைக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்
கட்சி சார்பில் 133 வாக்குறுதிகள் அளித்துள்ளோம். நான் டாக்டர். தொண்டு நிறுவனம் நடத்தி சமூக சேவை செய்து வருகிறேன். இந்த அடிப்படையில் மக்களுக்கு நிறைய செய்ய முடியும். லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அலுவலகம் திறந்து மக்கள் குறை தீர்ப்பேன். மக்கள் எளிதில் அணுகும் எம்.பி.,யாக இருப்பேன். அரசு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு கட்டடம் கட்டித்தருவேன். அதற்கான பயிற்சி வகுப்பும் நடத்துவேன்.
முழு நேர அரசியல்வாதியாகி விட்டீர்கள். மருத்துவ தொழிலை யார் பார்ப்பார்கள்
என் மகன், மகள், மருமகள் டாக்டர்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் எல்லாம் டாக்டரானதற்கு எம்.ஜி.ஆர்.,தான் காரணம்.
நான் எளிதாக வெற்றி பெறுவேன் என தற்போதைய எம்.பி., வெங்கடேசன் கூறுகிறாரே.
அவரை நாலரை ஆண்டுகளாக மக்கள் பார்க்கவே இல்லை. சமூகவலைத்தளத்தில் ஆட்களை வைத்து தன்னை முன்னிலைப்படுத்துகிறார். அ.தி.மு.க., ஆட்சியில்தான் மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வடிவேலு ஸ்டைலில் வெங்கடேசன் 'வான்டட்' ஆக வந்து பூர்த்தியான திட்டங்கள் எல்லாம் தன்னால் தான் முடிந்ததாக கூறுகிறார்.
வாக்குறுதிகள் என்ற பெயரில் 44 வடை சுட்டார். நான் டாக்டர் என்ற முறையில் அந்த வடை நல்லதல்ல என மக்களுக்கு சொல்கிறேன். மக்களை புறக்கணித்த அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மேலுார் தொகுதியில் தண்ணீரின்றி பயிர்கள் கருகின. அதற்குகூட அவர் குரல் கொடுக்கவில்லை. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது கட்சி துணைமேயர் அலுவலகம் தாக்கப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களுக்காக அவர் போராடுவதில்லை. எங்கள் கட்சி செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் அனைவரின் ஒத்துழைப்பால் நிச்சயம் என் வெற்றி சாத்தியமாகும். முதல் இடம் அ.தி.மு.க.,வுக்குதான். இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்பதில் தி.மு.க., - பா.ஜ., இடையே போட்டி நிலவுகிறது.
இதுவரை நீங்கள் இருந்த கட்சிகள் பற்றி...
ம.தி.மு.க.,வில் வைகோ உணர்ச்சி வசப்படக்கூடியவர். கணேசமூர்த்தியிடம் அவர் பேசியிருந்தால் அவர் தற்கொலை முயற்சிக்கு சென்றிருக்க மாட்டார். தி.மு.க., ஜமீன்தாரர் முறை உள்ள கட்சி. நான் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது பார்வையற்ற ஐ.ஏ.எஸ்., பெண்ணுக்கு கூகுள் லென்ஸ் வாங்கிக்கொடுத்தேன். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் என்னை போனில் அழைத்து பாராட்டினார். உட்கட்சி அரசியலால் பின்னர் எனக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. தலைமையாசிரியர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. ஆசிரியர்களும் நல்லவராக இருக்க வேண்டுமே.
பா.ஜ.,வில் மதரீதியான போக்கு நிலவுகிறது. அமைச்சர் தியாகராஜன் மீது மதுரை விமான நிலையம் அருகே தேவையில்லாத விஷயம் செய்தார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு கூறினார்.

