/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைப்பது... எப்போது: 7 ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பு
/
மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைப்பது... எப்போது: 7 ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பு
மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைப்பது... எப்போது: 7 ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பு
மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைப்பது... எப்போது: 7 ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பு
ADDED : செப் 12, 2025 03:59 AM

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைப்பதற்கான கோப்புகள் தயார் செய்து அரசிற்கு அனுப்பி 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில், 75 சதவீதம் மக்கள், விவசாயத்தை சார்ந்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள வீடுர் அணை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை மூலம் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இம்மாவட்டத்தின் நிலவியல் அமைப்பு மற்றும் பருவநிலை வேளாண் தொழிலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
இதனால், முந்திரி, நெல், கரும்பு, வாழை, கருணை கிழங்கு, பயறு வகை மற்றும் சிறுதானிய வகை பயறுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்படும் அளவில் மண் வளம் உள்ள ஒரே மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது.
தமிழகத்திற்கான உணவு தானிய உற்பத்தியில், விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து மாநிலத்தில் பிரதான இடத்தை பிடித்து வருகிறது.
மேலும், திண்டிவனம் பகுதியில் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது.
இதுபோன்று முழுக்க, முழுக்க விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள, இம்மாவட்ட மாணவர்கள் வேளாண் படிப்பிற்காக கோயம்புத்துார், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, அரசு சட்டக்கல்லுாரி, அரசு ஆசிரியர் பயிற்சி கல்லுாரி, அரசு பி.எட்., கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு ஐ.டி.ஐ.,கள் உள்ளிட்ட முதன்மையான அனைத்து அரசு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள ஆண்கள், பெண்கள் வேளாண் சார்ந்த பின்புலத்தில் வளர்வதால் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லுாரி துவங்க வேண்டுமென நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, அரசு வேளாண் கல்லுாரி அமைக்க, மாவட்டத்தின் விவசாய சூழ்நிலைகள் குறித்த கோப்புகளை தயாரித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம், மாவட்ட அதிகாரிகள், அரசிற்கு அனுப்பினர்.
இந்த கோப்புகளின் அடிப்படையில், அதே ஆண்டு மானிய கோரிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லுாரிக்கான அறிவிப்புகள் வெளியாகும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியாகவில் லை.
இதையடுத்து, கடந்த 2018 முதல் ஒவ்வொரு மானிய கோரிக்கையின்போதும் அதற்கான அறிவிப்பு வருமா என மாவட்ட மக்கள், மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகாமல், கோப்புகள் கிடப்பில் உள்ளன.
எனவே, விவசாயம் சார்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைக்க அதிகாரிகள், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-நமது நிருபர்-.