/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசாரை அலறவிட்ட ரவுடி கும்பலுக்கு 'கம்பி'
/
போலீசாரை அலறவிட்ட ரவுடி கும்பலுக்கு 'கம்பி'
ADDED : செப் 11, 2025 11:36 PM

திண்டிவனம்:திண்டிவனத்தில் போலீசாரை தாக்கியதுடன், போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து மிரட்டிய ரவுடிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், கிடங்கல் காலனியை சேர்ந்த ஆகாஷ், 25, ராஜேஷ், 26, சின்னராசு, 20, ஆகியோர் கஞ்சா போதையில், பஸ் பயணியரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் டவுன் போலீஸ் ஏட்டுக்கள் முருகையன், நாகராஜன் ஆகியோர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில், ஆகாஷ், ஏட்டு முருகையனை தாக்கி, கீழே தள்ளிவிட்டார்.
தொடர்ந்து, டவுன் எஸ்.ஐ., முருகானந்தம் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்த போது, ஆகாஷ் தப்பி ஓடிவிட்டார். ராஜேஷ், சின்னராசுவை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த ரவுடி சேட்டு, 27, என்பவர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு, 9:00 மணியளவில் கையில் பீர்பாட்டிலுடன் சென்றார்.
போதையில் இருந்த அவர், தன் தலையில் பீர் பாட்டிலால் அடித்துக்கொண்டு, 'எப்படி ராஜேஷை கைது செய்யலாம்?' எனக்கூறி, போலீஸ் ஸ்டேஷன் மேஜையை அடித்து நொறுக்கினார்.
இந்த சம்பவத்தை மொபைல் போனில் படம் எடுத்த பெண் காவலர் மீனாட்சியை தாக்கி, அவர் போனை பிடுங்கி உடைத்தார்.
இந்த சம்பவத்தின்போது, சேட்டுவின் கூட்டாளிகள் கிடங்கல் பாலச்சந்திரன், ராஜேஷ் மனைவி மனோகரி, 20, ஆகியோரும் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து தகராறு செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில், ராஜேஷ், மனோகரி ஆகியோர் பிளேடால் தங்கள் உடலில் கிழித்துக் கொண்டனர். மேலும், மனோகரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
தொடர்ந்து, ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரேணஸ்வரி மற்றும் போலீசார் வந்து, ஸ்டேஷனில் புகுந்து கலாட்டா செய்த ராஜேஷ், சேட்டு, சின்ராசு, பாலச்சந்திரன், மனோகரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷை தேடி வருகின்றனர்.