/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சராயன் சரணாலயத்தில் 'செங்கழுத்து உள்ளான்' 192வது புதிய வரவாக பதிவு
/
நஞ்சராயன் சரணாலயத்தில் 'செங்கழுத்து உள்ளான்' 192வது புதிய வரவாக பதிவு
நஞ்சராயன் சரணாலயத்தில் 'செங்கழுத்து உள்ளான்' 192வது புதிய வரவாக பதிவு
நஞ்சராயன் சரணாலயத்தில் 'செங்கழுத்து உள்ளான்' 192வது புதிய வரவாக பதிவு
ADDED : செப் 20, 2025 07:57 AM

திருப்பூ; திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், 'செங்கழுத்து உள்ளான்' என்ற பறவை தென்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்து செல்லும் பறவை களின் எண்ணிக்கை, 192ஐ எட்டியிருக்கிறது.
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு இதுவரை, 146 வகை உள்நாட்டு பறவைகள், 43 வகை வெளிநாட்டு பறவைகள் என, இதுவரை, 191 வகை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இச்சரணாலயத்துக்கு புதிதாக வலசை வந்து செல்லும் பறவையினங்களை அறியும் பணியில், வனத்துறை மற்றும் திருப்பூர் இயற்கை கழகத்தினர் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் காமாட்சி, நந்தகோபால், சந்தோஷ் ஆகியோர், வனத்துறை சூழல் வழிகாட்டி மணிகண்டன் உதவியுடன் நேற்று பறவை நோக்கலில் ஈடுபட்ட போது 'செங்கழுத்து உள்ளான்' என்ற பறவை தென்பட்டது.
சிறப்பு என்ன? இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் காமாட்சி கூறியதாவது: நஞ்சராயன் பறவைகள் சரணலாயத்தில் தென்பட்ட, 192வது பறவையாக, 'செங்கழுத்து உள்ளான்' என்ற பறவை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது, மிகவும் அரிதான ஒரு பறவை. குளிர் காலத்தில், ஆர்டிக் துருவப்பகுதியில் இருந்து, இந்தியா உட்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரையை நோக்கி செல்வது இவற்றின் வழக்கம்.
அவ்வாறு செல்லும் போது, உள்ளூர் நீர் நிலைகளில் இறங்கி, இளைப்பாறி, இரை உண்டு, தன் பறக்கும் ஆற்றலை மீட்டெடுத்து செல்லும்.
அந்த வகையில், திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் இந்த பறவை இறங்கியுள்ளது. ஒரு வார காலம் இங்கிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சமீபத்திய ஆண்டுகளில் கோவை, தாராபுரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள உள்ளூர் நீர்நிலைகளில் இப்பறவை அரிதாக தென்பட்டதாக, பதிவுகள் உள்ளன, என்றார்.