/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி உயிர்கள் பறிபோகக் கூடாது!
/
இனி உயிர்கள் பறிபோகக் கூடாது!
ADDED : டிச 30, 2025 07:07 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், அவசர கால சிகிச்சைக்கான வசதிகள் அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கிடைக்காமல், நோயாளிகள் உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
கடந்த 2025ம் ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில், அரசு சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சந்தித்த சவால்கள், 2026ம் ஆண்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்த தொகுப்பு இது:
கனவு நிறைவேறியது ஜப்பான் பன்னாட்டு முகமை (ஜமைக்கா) நிதி உதவி, 48 கோடி ரூபாயில், நான்கு தளங்களுடன் கட்டப்பட்ட, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆக., இரண்டாவது வாரம் திறக்கப்பட்டது. முதல் ஒரு மாதத்தில், 450 பேர் பயன் பெற்றனர். ஆனால், 12 டாக்டர் மட்டுமே உள்ளனர். சிறப்பு பிரிவு அறை, உபகரணங்கள் உள்ள போதும், டாக்டர் நியமனம் முழுமையாக இல்லை. மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து பகுதி நேரமாக டாக்டர் வந்து செல்கின்றனர்.
கட்டமைப்பில் முழுமை இருந்தும், கூடுதல் டாக்டர் நியமனம் இல்லாமல் தடுமாற்றம் உள்ளது. கூடுதல் டாக்டர், பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். படியூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தில், ஏழு இடங்களில் மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்ற வேண்டியுள்ளது.
வசதிகள் இல்லை திருப்பூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக, காங்கயம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, நான்கு ஆண்டுகளாகிறது. ஆனால், ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை வளாகம் கட்டும் பணி, 90 சதவீதத்தை நெருங்கியுள்ளது. 2026ம் ஆண்டில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். அவிநாசி மற்றும் பல்லடத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் இட நெருக்கடி, அவசர கால சிகிச்சை உட்பட பல வசதிகள் இந்தாண்டு கிடைக்கவில்லை. அவசர சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் உயிரை பறி கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது.
சுக பிரசவங்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில், 2025ல் கடந்த, 11 மாதத்தில், 13 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில், 62 சதவீதம் சுகபிரசவங்கள்.
எப்போது மாறும்? திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் செயல்பட்டு வந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டும் பணியால், வேறு இடத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. சித்த மருத்துவ அலுவலகத்துக்கு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் இடம் கொடுக்காமல் கைவிரித்தனர். புத்தாண்டில், இடம் கிடைத்து புதிய மாவட்ட சித்த அலுவலகம் கட்டுவதுடன், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
சிக்கிய 'போலி'கள் மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் தலைமையிலான கண்காணிப்பு குழு தொடர் ஆய்வில் 2025ம் ஆண்டில், ஐந்து போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர். போலி டாக்டர்களை களையெடுப்பதில் சுணக்கம் நிலவுகிறது. மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு கூடுதல் ஆய்வாளர் புத்தாண்டிலாவது நியமிக்கப்பட வேண்டும்.

