/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரமபத வாசல் திறப்பு பக்தர்கள் குவிந்தனர்
/
பரமபத வாசல் திறப்பு பக்தர்கள் குவிந்தனர்
ADDED : டிச 30, 2025 06:54 AM

திருப்பூர்: திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த, 20ம் தேதி முதல், திருமொழி திருநாள் எனப்படும், பகல்பத்து உற்சவம் நடந்து வந்தது.
நேற்று, நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் ஸ்ரீநாச்சியார் திருக்கோலத்துடன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். இத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது.
முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை, 3:00 மணிக்கு ஸ்ரீ வீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், பரமபத வாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கருடசேவை திருவீதியுலாவும், இரவு பத்து உற்சவமும் நடக்கிறது. இன்று பரமபதவாசல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு வழங்க 1.08 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளன.
நாளை முதல் வரும் ஜன. 8ம் தேதி வரை (6ம் தேதி நீங்கலாக) மாலை, 6:00 முதல் இரவு,8:00 மணி வரை, பரமபத வாசல் திறந்திருக்கும். வரும் 8ம் தேதி திருவாய்மொழி திருநாள் சாற்றுமுறையும்,ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன், இரவு பத்து உற்சவம் நிறைவு பெற உள்ளது. பின், 11ல் கூடாரை வெல்லும் உற்சவமும், அன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருப்பூர் பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது.

