/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் பாதுகாப்புடன் குறைகேட்பு கூட்டம்
/
போலீஸ் பாதுகாப்புடன் குறைகேட்பு கூட்டம்
ADDED : செப் 10, 2025 11:50 PM

திருப்பூர்:
திருப்பூரில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் தலைமையில், மாதந்தோறும் கடைசி வாரம், வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.
கடந்த ஜூலை மாத குறைகேட்பு கூட்டத்தில், பி.ஏ.பி., திட்டக்குழுவை, திருட்டுக்குழு என, விவசாயி சிவக்குமார் பேசினார். இதனால், விவசாயிகளும், பி.ஏ.பி., திட்டக்குழு உறுப்பினர்களும், கலெக்டர் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது, திருப்பூர் மாநகராட்சியின் குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக காஸ்குழாய் கொண்டசெல்ல எதிர்ப்பு, இனாம் நிலம் விவகாரம் என, அடுக்கடுக்கான பிரச்னைகள் விவசாயிகள் கையில் உள்ளன. இதனால், வேளாண் அதிகாரிகள், கடந்த ஆக., மாதம் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தையே நடத்தாமல் தவிர்த்தனர்.
எனவே, ஆக., மாதத்துக்கான கூட்டத்தை செப்., முதல் வாரம் நடத்த வேண்டும் என, விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைவிடுத்தனர். இதனால், குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக, தரை தளத்திலுள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
வீடியோ பதிவு முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னை பெரிய அளவில் வெடிக்கும் என கணிக்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவாயிலிலேயே பேரிகார்டு வைக்கப்பட்டு, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பின்னரே, விவசாயிகள், பொதுமக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலக வளாக முன்பக்கம் மற்றும் பின்பக்க போர்டிகோ, குறைகேட்பு கூட்ட அரங்கம், வளாகத்தில் ஆங்காங்கே என, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உள்பட போலீசார் நுாறு பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு வெளியே, போர்டிகோவில் கேமரா வைக்கப்பட்டு, நிகழ்வுகள் முழுநேரமும் வீடியோ பதிவு செய்யப்பட்டன. இது, விவசாயிகளை அதிருப்தி அடையச் செய்தது.