/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியை நீக்க விவசாயிகள் புதிய திட்டம்
/
வறட்சியை நீக்க விவசாயிகள் புதிய திட்டம்
ADDED : டிச 23, 2025 07:38 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு நடந்தது.
ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மதுசூதனன், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் பரமசிவம், கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி, செம்மிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொன்னுசாமி, திருமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் ஒன்றியத்தில் பி.ஏ.பி., பாசன வசதி இல்லாத கோடங்கிபாளையம், பருவாய், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கே. அய்யம்பாளையம், கரடிவாவி உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட மேற்கு பகுதி கிராமங்கள், பல ஆண்டுகளாகவே வறட்சியின் பிடியில் உள்ளன.
நொய்யலில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது வரும் உபரி நீரை சேமிக்க, சாமளாபுரம் பகுதியில் நீரேற்று நிலையம் உருவாக்கி, மேற்கு பகுதி கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளில் தண்ணீரை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தீவன பற்றாக்குறையை போக்க, உலர் தீவனம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

