/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்தும் உலகை 'பார்க்கும்' கண்கள்; தொழிலாளி குடும்பத்தினர் 'ஈகை'
/
இறந்தும் உலகை 'பார்க்கும்' கண்கள்; தொழிலாளி குடும்பத்தினர் 'ஈகை'
இறந்தும் உலகை 'பார்க்கும்' கண்கள்; தொழிலாளி குடும்பத்தினர் 'ஈகை'
இறந்தும் உலகை 'பார்க்கும்' கண்கள்; தொழிலாளி குடும்பத்தினர் 'ஈகை'
ADDED : செப் 09, 2025 11:21 PM

பல்லடம்; பல்லடம் ஈகை அறக்கட்டளையின் முயற்சியால், இளம் தொழிலாளி ஒருவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் மருதமுத்து, 44. பனியன் கம்பெனி டெய்லர். சமீபத்தில், நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் ஈகை அறக்கட்டளையினர், கண் தானத்துக்காக மருதமுத்துவின் குடும்பத்தினரை அணுகினர். அவர்களும் சம்மதிக்கவே, கண்கள் தானமாக பெறப்பட்டது.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயன் கூறியதாவது:
இளம் வயதில் இறப்பவர்களின் கண்களை தானமாக தருவதற்கு யாரும் முன் வருவதில்லை. அவ்வாறு கேட்டால், மனசாட்சி இல்லாமல் பேசுகிறீர்கள் என பலரும் எங்களை திட்டினாலும் பரவாயில்லை என்றுதான், கண் தானம் செய்யுமாறு வேண்டுகிறோம்.
அவ்வகையில், மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்த மருதமுத்துவின் குடும்பத்தினரும் கண் தானம் வழங்குவதற்கு மிகவும் யோசித்த நிலையில், எங்களது கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர். அவரை இழந்த சோகத்துக்கு இடையிலும், கண் தானம் வழங்க ஒப்புக்கொண்டனர்.
அவ்வகையில், கோவை அரசு மருத்துவமனைக்கு மருதமுத்துவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இறந்தவர்களின் கண்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் என்ற மனதிருப்தியே எங்களுக்கு போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.