/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் இளைஞர்கள்; 'ரீல்ஸ்' மோகத்தால் உயிரை பணையம் வைக்கும் அபாயம்
/
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் இளைஞர்கள்; 'ரீல்ஸ்' மோகத்தால் உயிரை பணையம் வைக்கும் அபாயம்
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் இளைஞர்கள்; 'ரீல்ஸ்' மோகத்தால் உயிரை பணையம் வைக்கும் அபாயம்
'கோம்ஸ்' நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் இளைஞர்கள்; 'ரீல்ஸ்' மோகத்தால் உயிரை பணையம் வைக்கும் அபாயம்
ADDED : செப் 12, 2025 08:04 PM

கோத்தகிரி: கோத்தகிரி கோம்ஸ் நீர்வீழ்ச்சியில், தடையை மீறி அத்துமீறும் இளைஞர்களால், ஆபத்து அதிகரித்துள்ளது.
கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் கோடநாடு சாலையில், சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறாத இந்த நீர்வீழ்ச்சி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இங்கு தேயிலை தோட்டங்கள் வழியாக மண் சாலையில் சென்று, பிறகு கரடு முரடான ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டும். பாதுகாப்பு இல்லாத இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்வதற்கு தடை விதித்து, வனத்துறை சார்பில், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி, பலர் இப்பகுதிக்கு சென்று, நீர்வீழ்ச்சியில் குளிப்பது தொடர்கிறது. மேலும், உணவு பொட்டலங்களுடன் செல்பவர்கள், மது அருந்துவதுடன், பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லும் உணவு கழிவுகளை வீசுவதும் தொடர்கிறது. இதனால், வன விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, ஆபத்தை உணராமல் இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க செல்வதால், பாசிபடர்ந்த பாறையில் வழுக்கி நீரில் மூழ்கியும், சுழலில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில், சுற்றுலா வந்த இளைஞர்கள், இங்கு உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
சமீப காலமாக, சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வெளியிடுவதற்காக, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது,
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்வதை முழுமையாக தடுக்க, வனத்துறை கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அத்துடன், தடையை மீறி அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.