/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிக்கையாளர் நகைகளுடன் கடை உரிமையாளர் ஓட்டம்
/
வாடிக்கையாளர் நகைகளுடன் கடை உரிமையாளர் ஓட்டம்
ADDED : செப் 11, 2025 03:52 AM
மதுரை:மதுரையில் வாடிக்கையாளர்களிடம், பழைய நகைகளை புதிய டிசைன் நகைகளாக மாற்றி தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் நகைக்கடை உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
மதுரையில் மனோஜ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தவர்கள் பூபதி, ராஜசேகரன். இவர்களிடம் மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பழைய நகைகளை கொடுத்து, புதிய நகைகளாக வாங்கிச் செல்வது வழக்கம். இப்படி 50க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிய இவர்கள், இரு மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் தலைமறைவாயினர். கடையும், வீடும் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்காததால், நேற்று கமிஷனர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
சிலர் குடும்பத்தினருக்கு தெரியாமல் நகை செய்ய கொ டுத்திருந்த நிலையில், கடைக்காரர்கள் நகையை எடுத்துச் சென்று விட்டனர். வயலில் களையெடுத்து சேர்த்த காசு, குழந்தையோட தங்கத்தாயத்து எல்லாம் கொடுத்து ஏமாந்து விட்டோம். கல்யாணம், காது குத்து, படிப்புக்காக சேர்த்த அவ்வளவு நகையும் போச்சு.
இவ்வாறு கூறி கண்கலங்கினர்.