/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை வண்டி சாவி திருட்டு சர்ச்சையில் துாய்மை பணியாளர்கள்... சண்டை 'நாறுது' : ஒப்பந்த நிறுவனத்துடனான மோதலால் 23 பேர் 'டிஸ்மிஸ்'
/
குப்பை வண்டி சாவி திருட்டு சர்ச்சையில் துாய்மை பணியாளர்கள்... சண்டை 'நாறுது' : ஒப்பந்த நிறுவனத்துடனான மோதலால் 23 பேர் 'டிஸ்மிஸ்'
குப்பை வண்டி சாவி திருட்டு சர்ச்சையில் துாய்மை பணியாளர்கள்... சண்டை 'நாறுது' : ஒப்பந்த நிறுவனத்துடனான மோதலால் 23 பேர் 'டிஸ்மிஸ்'
குப்பை வண்டி சாவி திருட்டு சர்ச்சையில் துாய்மை பணியாளர்கள்... சண்டை 'நாறுது' : ஒப்பந்த நிறுவனத்துடனான மோதலால் 23 பேர் 'டிஸ்மிஸ்'
ADDED : செப் 19, 2025 02:36 AM

மதுரை: மதுரையில் குப்பை வண்டிகளின் சாவிகளை திருடிய சம்பவத்தில் 23 துாய்மை பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் துாய்மைப் பணியாளர் சங்கங்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையேயான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் குப்பை அகற்றும் பணியை அவர்லேண்ட் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளால் சி.ஐ.டி.யு., வி.சி., உள்ளிட்ட துாய்மைப் பணியாளர்கள் சங்கங்களுக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் நீடிக்கிறது.
இதனால் மாநகராட்சி பகுதிகள் குப்பை அகற்றுவது பாதிக்கிறது. 2 நாட்களுக்கு முன் செல்லுார் வாகன காப்பகத்தில் குப்பை வண்டிகளின் சாவிகளை சிலர் திருடிச் சென்றனர். இதுகுறித்து செல்லுார் போலீசில் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே துாய்மைப் பணியாளர்களுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் சம்பளத்தில் ரூ.56 லட்சம் வரை குறைக்கப்பட்டதை நிர்வாகிகள் கேட்டதால் அவதுாறாக இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தால் நகரில் தேங்கியுள்ள 600 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை அகற்றுவதில் மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து மாற்றுச் சாவிகள் பயன்படுத்தி வண்டிகளை இயக்கியும், கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்தும் குப்பை அகற்றும் பணியை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே 23 துாய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக நீக்கி நிறுவனம் உத்தரவிட்டது. இதனால் துாய்மைப்பணியாளர்கள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நிறுவனம் தரப்பில், 'அத்துமீறல், சாவி திருட்டு மற்றும் மிரட்டல் சம்பவங்களில் தொடர்புடைய 23 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவு உள்ளது. போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
சங்கங்கள் தரப்பில், 'ஒப்பந்த நிறுவனம் வேண்டுமென்றே குறிவைத்து தொழிலாளர்களை நீக்கியுள்ளது. பேச்சு வார்த்தைக்கு பின் சாவியை ஒப்படைத்த பின் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய வகையில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்' என்றனர்.
இருதரப்புக்கும் முடிவில்லாமல் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்படுவதால் வார்டுகளில் தினமும் குப்பை தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் தான் பாதிப்பர். அமைச்சர்கள், கலெக்டர், கமிஷனர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.