/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்னும் ஒரே வருஷம்தான்! மதுரை ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை முடிக்க இலக்கு
/
இன்னும் ஒரே வருஷம்தான்! மதுரை ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை முடிக்க இலக்கு
இன்னும் ஒரே வருஷம்தான்! மதுரை ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை முடிக்க இலக்கு
இன்னும் ஒரே வருஷம்தான்! மதுரை ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை முடிக்க இலக்கு
ADDED : டிச 15, 2025 05:42 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், விமான நிலையத்துக்கு நிகரான வசதிகளுடன் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு ரூ.347.47 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளில் புதிய கிழக்கு, மேற்கு 'டெர்மினல்' கட்டடங்கள், அனைத்து பிளாட்பாரங்களையும் இணைக்கும் வகையில் 'ஏர் கான்கோர்ஸ்' எனும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 42 மீ., அகல மேம்பாலம் அமைத்தல், நடை மேம்பாலங்களை சீரமைத்தல், பார்சல் போக்குவரத்திற்கென பிரத்யேக மேம்பாலம் அமைத்தல், விசாலமான பார்க்கிங் வசதி, பாதசாரிகளுக்கான கூரையுடன் கூடிய நடைபாதை, பெரியார் பஸ் ஸ்டாண்டுடன் ஸ்டேஷனை இணைக்கும் சுரங்கப்பாதை அமைத்தல் உள்ளிட்டவை அடங்கும்.
அதில், கிழக்கு பகுதி பல்லடுக்கு டூவீலர் பார்க்கிங், மேற்கு பகுதி பல்லடுக்கு கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து பயன்பாட்டில் உள்ளன. கிழக்கில் பல்லடுக்கு கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு, மேற்கு டெர்மினல்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் 'ஏர் கான்கோர்ஸ்'ல் பயணிகள் காத்திருப்பு பகுதி, டிக்கெட் முன்பதிவு மையம், ஓய்வறைகள், ஓட்டல்கள் அமைய உள்ளன. அதற்காக பிளாட்பாரங்களில் துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
துாண்கள் அமைத்தல் கிழக்கு, மேற்கு பகுதிகளில் குடிநீரை தேக்கி வைக்க நிலத்திற்கு அடியில் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேற்கில் புதிய 'டெர்மினல்' கட்டடத்திற்காக 203 அடித்தள துாண்களில் 75 அமைக்கப்பட்டுள்ளன. பார்சல் போக்குவரத்திற்கென பிரத்யேக பாலத்திற்காக அனைத்து பிளாட்பாரங்களிலும் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்சல்களை கொண்டு செல்ல 'லிப்ட்' அமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு டெர்மினலின் பகுதி 1ல் தரைதளம், முதல், 2ம் தளங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. முகப்பு மேம்பாடு, பூச்சி வேலைகள் நடக்கின்றன. பகுதி 2ல் 413 அடித்தள துாண்கள் அமைக்கப்பட்டு, கோபுர முகப்பு அமைத்தல், 2வது தள சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், பூச்சு வேலைகள் நடக்கின்றன. பகுதி 3ல் அமைய வேண்டிய 215 அடித்தள துாண்களில் 172 அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டேஷனை பெரியார் பஸ் ஸ்டாண்டுடன் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளில் ரயில்வே எல்லைக்குள் 38 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
2026 நவம்பருக்குள் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இச்சீரமைப்பு பணிகளில் பயணிகளுக்கான 'ஏசி' காத்திருப்போர் அறை 773.12 சதுர மீ., ஆகவும், 'ஏசி' அல்லாத காத்திருப்போர் அறை 3,855 சதுர மீ., ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2372.31 சதுர மீ., பரப்பளவில் அமையவுள்ள ஓய்வறையில் ஆண்களுக்கு 47, பெண்களுக்கு 21 படுக்கை வசதிகள் அமையவுள்ளன. 10,200 சதுர மீ.,ல் டூவீலர் பார்க்கிங், 287 சதுர மீ.,ல் கார் பார்க்கிங் அமைகின்றன. 35,730 சதுர மீ., பரப்பளவில் வர்த்தக வளாகம் அமைகிறது. மொத்தம் 27 எஸ்கலேட்டர்கள், 37 லிப்ட்கள் அமைக்கப்படுகின்றன. 1,425 சதுர மீ.,ல் ஓட்டல், 272.32 சதுர மீ.,ல் புட்கோர்ட் அமைய இருக்கின்றன. இரண்டு டெர்மினல் கட்டடங்கள் மட்டும் 22,846 சதுர மீ.,ல் அமைக்கப்படுகின்றன. கிழக்கு டெர்மினல்கள் வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும். மற்ற அனைத்து பணிகளும் 2026 நவம்பரில் முடிக்கப்படும் என்றனர்.

