/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லா... புல்லா... புரியல!: மதுரை விவசாயிகளை மலைக்க வைக்கும் களைச்செடி
/
நெல்லா... புல்லா... புரியல!: மதுரை விவசாயிகளை மலைக்க வைக்கும் களைச்செடி
நெல்லா... புல்லா... புரியல!: மதுரை விவசாயிகளை மலைக்க வைக்கும் களைச்செடி
நெல்லா... புல்லா... புரியல!: மதுரை விவசாயிகளை மலைக்க வைக்கும் களைச்செடி
ADDED : செப் 12, 2025 04:59 AM

நெல்லைப் பொறுத்தவரை மதுரை மாவட்டத்தில் பாதிப்பின்றி மகசூல் எடுத்து வந்த நிலையில் இரண்டாண்டுகளாக களைச்செடி தாக்குதல், வைரஸ் நோய் தாக்குதல், வயலில் பாசி படிதல் என புதிய பிரச்னைகள் முளைத்துள்ளன. வயலில் பாசி படிந்தால் காப்பர் சல்பேட் மருந்தை கலந்து துாவ வேண்டுமென வேளாண் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது களைச்செடியை மேலாண்மை செய்வது சவாலாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித் துள்ளனர்.
பெரியாறு வைகை இருபோக பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர் திருப்பதி கூறியதாவது:
மதுரையில் கோதுமைப்புல் என்றொரு களைச்செடி புதிதாக முளைக்கிறது. நெல் நாற்று நட்டு 30 நாட்கள் வரை நெல்லைப் போலவே புல்லும் காணப்படுவதால் விவசாயிகளுக்கு அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 30 நாட்களுக்கு மேல் திடீரென புல் வெடித்து கிளை பரப்பி நெல்லை விட உயரமாக வளர்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு ஏக்கரில் உள்ள கோதுமைப்புல் களையை எடுப்பதற்கு கூலியாட்கள் வாரக்கணக்கில் வேலை செய்வதால் ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் இந்த கூடுதல் செலவால் கை நஷ்டம் ஏற்படுகிறது.
'சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்' என்பது போல நெல் விற்று எடுக்கும் காசை விட புல்லை அகற்றும் செலவு அதிகமாகிறது. கடந்தாண்டே இப்பிரச்னை குறித்து விவசாயிகள் தெரிவித்தும் வேளாண் துறை விழித்துக் கொள்ளவில்லை. தற்போது செப். 18 ல் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் விட உள்ள நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்காவது நெல், புல் கண்டறியும் முறையை வேளாண் அதிகாரிகள் கற்றுத்தர வேண்டும் என்றார்.
வேளாண் இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில்,''அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் மூலம் முகாம் அமைத்து களை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அடுத்து வரும் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்திலும் விளக்கப்படும்'' என்றார்.