/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்சிப்பணி செய்ய முடியாதவர்கள் ஒதுங்கி விடுங்கள்; தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

ADDED : செப் 17, 2025 12:23 AM
மதுரை: சட்டசபை தேர்தலையொட்டி கட்சிப் பணிகள் இனி கடுமையாக இருக்கும். பணி செய்ய முடியாத நிர்வாகிகள் ஒதுங்கி சென்றுவிடுங்கள். சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.,வின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் உத்தங்குடியில் நடந்தது. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், எம்.எல்.ஏ., வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் அரசு திட்டங்கள் பாகுபாடின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாவட்டத்தில் 1,122 ஓட்டுச்சாவடிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கட்சி உத்தரவிடப்பட்டது. சில இடங்களில் உறுதிமொழி ஏற்கவில்லை. கட்சித் தலைமை பிறப்பிக்கும் பணிகளை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். செய்ய முடியாத நிர்வாகிகள் கட்சியை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
புதிய பொறுப்பாளர்களை நியமித்துக்கொள்கிறேன். சிலர் 'அரசு வேலையா பார்க்கிறோம்' என பேசியுள்ளனர். அவர்களை கட்சியை விட்டு விடுவிக்க தயாராக உள்ளோம். மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தற்போது மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலுார், மேற்கு தொகுதிகளில் வெற்றி உறுதி. மீதமுள்ள 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.
இனி வரும் காலங்களில் நிர்வாகிகளுக்கு கட்சிப் பணி கடுமையாக இருக்கும். நிர்வாகிகள் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பதற்கு இனி நேரம் இல்லை. தொகுதிப் பொறுப்பாளர்கள் சொல்லும் பணிகளை பூத் கமிட்டியினர் கண்டிப்பாக செய்ய வேண்டும். கடைசி தேர்தலின்போது மேற்கு தொகுதியில் 1 லட்சம், கிழக்கில் 77 ஆயிரம் ஓட்டுக்கள் பதிவாகாமல் உள்ளன. அந்த ஓட்டுக்கள் என்ன ஆனது. ஓட்டுத் திருட்டு இங்கு நடக்கவிடக் கூடாது. இவ்வாறு பேசினார்.