ADDED : செப் 20, 2025 05:38 AM
சென்னை மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்தார். அதை முடித்துவிட்டு மும்பை செல்ல விமானம் நிலையம் சென்றார். சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காரில் பயணித்தபடி அதை வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்ட பூஜா ''விமான நிலையத்துக்கு ஒரு விரைவான படகு சவாரி வேண்டும்'' என்று அதில் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
வெப்சீரிஸில் அப்பாஸ்
தமிழில் பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். சிலகாலம் வாய்ப்பின்றி வெளிநாடுகளில் சென்று வேலை பார்த்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கிறார். ஜி.வி., பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் அடுத்து ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். இதில் கதையின் நாயகியாக துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடிக்க, சற்குணம் இயக்குகிறார்.
'தனி ஒருவன்-2' எப்போது
2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'தனி ஒருவன்'. இதன் இரண்டாம் பாகம் 2023ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை படம் துவங்கவில்லை. இதுபற்றி மோகன்ராஜா கூறுகையில், ''தனி ஒருவன் 2 பற்றி தயாரிப்பாளரிடம் பேசினேன். பட்ஜெட் காரணமாக இப்போது தயாரிக்க சரியான நேரமில்லை. ஆனால் கண்டிப்பாக எடுப்பதாக சொல்லியிருக்கிறார்'' என்றார். இதன்மூலம் 'தனி ஒருவன்-2' படம் இப்போதைக்கு உருவாகாது என தெரிகிறது.
'பாகுபலி' பாணியில் 'விருஷபா'
மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். 'பாகுபலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், பிரமாண்ட அரண்மனை செட்டுகள் போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த 'மதராஸி'
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் செப்., 5ல் வெளியான படம் 'மதராஸி'. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் இப்படம் தற்போது ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. டாக்டர், டான், அமரன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு 4வது ரூ.100 கோடி படமாக மதராஸி அமைந்துள்ளது. அதேசமயம் இந்த படம் இன்னும் லாபக் கணக்கை ஆரம்பிக்கவில்லை என்கிறார்கள்.
காசு கொடுத்து மீம்ஸ் போட வைக்கிறார்கள்:- பிரியங்கா
தமிழ், தெலுங்கில் நடிக்கிறார் பிரியங்கா மோகன். தற்போது பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார். இவருக்கு நடிப்பு வரவில்லை என வலைதளத்தில் இவரைப்பற்றி நிறைய மீம்ஸ் வெளியாகின. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா ''என்னை பிடிக்காதவர்கள் இதுபோன்று என்னைப்பற்றி காசு கொடுத்து மீம்ஸ் போடுகிறார்கள். அவர்கள் யார் என தெரியவில்லை. இந்த மீம்ஸை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்படுவதும் இல்லை. மனம் உடைந்து போவதும் இல்லை. இன்னும் என்னை திடப்படுத்திக் கொள்கிறேன்'' என்றார்.