ADDED : செப் 11, 2025 11:31 PM
கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : மோகினி
90களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மோகினி. இவர் அளித்த பேட்டியில், ''பிரசாந்த் உடன் கண்மணி படத்தில் நீச்சல் உடை அணிந்து நடிக்கணும் என இயக்குனர் ஆர்.கே., செல்வமணி திடீரென சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அன்றைய தினம் படப்பிடிப்பு பாதித்தது. இறுதியில் அந்தக் காட்சியில் கட்டாயத்தின் பேரில் நடித்தேன். சில கொள்கைகள் வைத்திருந்தாலும், நம் கையை மீறி சில விஷயங்கள் நடக்கும். அப்படித்தான் இந்த படத்திலும் என் விருப்பமின்றி நான் அப்படி நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது'' என்றார். --
ஆக் ஷன் ஹீரோ ஆகிட்டீங்க சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மதராஸி'. இந்த படத்திற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபற்றி சிவா வெளியிட்ட பதிவில், ''எக்ஸ்சலன்ட், என்ன பெர்பார்மன்ஸ், என்ன ஆக் ஷன், சூப்பர் எஸ்.கே. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆக் ஷன் ஹீரோ ஆகிட்டீங்க, வாழ்த்துகள்'' என ரஜினி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
-வாயுபுத்ரா : ஹனுமன் புகழ் பாடும் 3டி அனிமேஷன் படம்
சமீபத்தில் 'மகாவதார் நரசிம்மா' என்ற 3டி அனிமேஷன் படம் வெளியாகி ரூ.300 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து தெலுங்கில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் 'வாயுபுத்ரா' என்ற 3டி அனிமேஷன் படம் தயாராகிறது. ஹனுமன் புகழ் பாடும் இந்தபடம் பான் இந்தியா வெளியீடாக 2026 விஜயதசமிக்கு வெளியாகிறது.
ஹீரோவாகும் இசையமைப்பாளர் மகன்
இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தனும் இசையமைப்பாளராக சிபி சத்யராஜ் நடிக்கும் படத்தில் களமிறங்கினார். ஆனால் அந்தப்படம் வெளியாகவில்லை. இப்போது ஹீரோவாக களமிறங்குகிறார். லிங்குசாமி இயக்கும் ஒரு காதல், பயணம் தொடர்பான படத்தில் ஹர்ஷவர்தன் தான் நாயகன். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் காணிக்கை தந்த இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு மகன் கார்த்திக் ராஜா மற்றும் பேரன் யத்தீஸ்வர் உடன் சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ் மற்றும் வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். இவற்றின் மதிப்பு பல கோடி. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வங்களுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. கோயில் சார்பில் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது.
அதிகமாக அலைபேசி பயன்படுத்தும் ஸ்ருதி
நடிகை ஸ்ருதிஹாசன் கைவசம் 'டிரெயின், சலார் 2' ஆகிய படங்கள் உள்ளன. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ''எல்லோரையும் போன்று நானும் அலைபேசியை அதிகமாக பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இதனால் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதேசமயம் சில சமயங்களில் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் வெறுப்பாகவும் இருக்கிறது'' என்றார்.