/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறநிலையத்துறை சட்ட விதியின்படி கோயில் அறங்காவலர்கள் நியமனம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அறநிலையத்துறை சட்ட விதியின்படி கோயில் அறங்காவலர்கள் நியமனம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அறநிலையத்துறை சட்ட விதியின்படி கோயில் அறங்காவலர்கள் நியமனம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அறநிலையத்துறை சட்ட விதியின்படி கோயில் அறங்காவலர்கள் நியமனம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 14, 2025 05:39 AM
மதுரை: அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு கோயில் வளாகத்திலும் அறிவிப்பு செய்ய தாக்கலான வழக்கில்,அறநிலையத்துறை சட்டம், விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி அறங்காவலர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அறங்காவலர்களை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் குழுக்களை தமிழக அரசு அமைத்தது. விதிகள்படி அறிஞர்கள், நன்கொடையாளர்கள், மத சம்பந்தமான ஈடுபாடு உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அவர்களுக்கு கலாசாரம், பாரம்பரியம், கோயில்களின் வரலாறு பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அரசியல் செல்வாக்கு, தலையீடு உள்ளவர்களை நியமிக்கின்றனர். தகுதி புறக்கணிக்கப்படுகிறது.அரசியல் பின்புலம் உள்ளவர்களை அறங்காவலர்களாக நியமித்தால் கோயில் செயல் அலுவலர்களை மிரட்டுவர். ஒப்பந்தப் பணி வழங்குவதில் அழுத்தம் கொடுப்பர். அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் வி.ஏ.ஓ.,அலுவலகங்களுக்குச் செல்ல அறிவுறுத்துகின்றனர்.அறங்காவலர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு கோயில் வளாகத்திலும் அறிவிப்பு செய்ய வேண்டும். புது அறங்காவலர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்களை நியமிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ்,'கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது,' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட பிற தகுதிகளை பரிசீலிக்க வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.