/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்கள்
/
காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்கள்
காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்கள்
காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்கள்
ADDED : டிச 30, 2025 07:40 AM

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க காப்புக்கட்டி விரதம் மேற்கொள் கின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கல் நாளில், ஆண்டின் முதல் போட்டியாக அவனியாபுரத்தில் நடக்க உள்ளது. அவனியாபுரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். இவர்களில் பலர் சில தினங்களுக்கு முன்பு மந்தையம்மன் கோயில், அய்யனார் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவக்கினர். பலர் பழநி முருகனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து விரதத்தை தொடர உள்ளனர்.
மாடுபிடி வீரர்கள் கார்த்திக், மணிபாய், யுவராஜ், விஷ்வா, கந்தராஜ், ராஜ்குமார், சிவகுமார், ரஞ்சித், பழனி கூறியதாவது: ஆண்டுதோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் காப்பு கட்டியும், பலர் மனக்கட்டுப்பாடுகளுடனும் 21 முதல் 48 நாட்களுக்கு விரதம் மேற்கொள்கிறோம். இந்தாண்டு பல புதிய இளைஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் எங்களுடன் மாடு பிடிக்க ஆர்வமாக உள்ளனர்.
தினமும் காலையில் கோயிலுக்குச் செல்வது, ஓட்டம், நடை, வேகமாக நடத்தல், நீச்சல் பயிற்சி, கண்களுக்கு சிறப்பு பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். வழக்கமாக ஊர் கடைசியில் வாடிவாசல் அமைத்து அதில் மூங்கணாங் கயிறுகளுடன் காளைகளை அவிழ்த்து விட்டு பிடிக்க பயிற்சி எடுப்போம். இந்தாண்டு அப்பயிற்சிக்கு அனுமதி கிடைத்தால் துவங்குவோம்.
அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேடு மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கு பங்கேற்போம். காளைகளை பிடித்து பரிசு பெறவும், வீரர்கள், காளைகளுக்கு காயம் ஏற்படக்கூடாது, சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க வேண்டும் என வேண்டி காப்பு கட்டியுள்ளோம். ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்கிறோம் என்றனர்.

