/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சுறுத்தும் காட்டுமாடுகள்; கொசுக்களால் தொற்று
/
அச்சுறுத்தும் காட்டுமாடுகள்; கொசுக்களால் தொற்று
ADDED : செப் 19, 2025 02:17 AM

அல்லாடும் கொடைக்கானல் 18வது வார்டு மக்கள்
கொடைக்கானல்: அச்சுறுத்தும் காட்டுமாடுகள் ,கொசுக்களால் நோய் தொற்று என பல்வேறு பிரச்னைகளுடன் - கொடைக்கானல் நகராட்சி 18 வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
ஆனந்தகிரி 1, 2, 3 தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் சேதமடைந்த சாக்கடையால் தெருக்களில் கழிவு நீர்ஓடுகிறது. இதன் தேக்கத்தால் கொசு உற்பத்தியும் அதிகம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வதை செய்யப்படும் ஆடுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காமராஜர் சாலை பகுதியில் வாகனம் நிறுத்தமின்றி ரோட்டோரம் நிறுத்துகின்றனர்.
இது போன்று ஆனந்தகிரி அனைத்து தெருக்களிலும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்து. நாய்கள், காட்டுமாடுகள் ரோட்டில் இஷ்டம் போல் திரிவதால் அச்சுறுத்தல் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ள போதை வஸ்துக்கள்,குப்பைத்தொட்டி இல்லாத அவலம் என ஏராளமான பிரச்னைகள் இங்கு உள்ளன.
சமூக விரோதிகளால் அச்சம் சுலைமான், டிரைவர்: ஆனந்தகிரி 3 வது தெருவில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில்புதர் மண்டி விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மூன்றரை தெருவில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகளை சமூக விரோதிகள் பயன்படுத்துவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் உள்ளனர் .
ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெரு நாய் பிரச்னையால் குடியிருப்புவாசிகள் அச்சப்படும் நிலை உள்ளது. குப்பை கொட்டுவதற்கு தொட்டி வசதியின்றி ரோட்டில் கொட்டுவதால் சுகாதாரக் கேடுடன் உள்ளது.
சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை வனராஜ், வியாபாரி : ஆனந்தகிரி 2 வது தெருவில் குடியிருப்பு பகுதியில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு ஆடுகள் வதை செய்யப்படுகிறது. இறைச்சிக் கழிவுகள் குப்பை குவியலால் துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
கொசுக்கள் அதிகரித்து ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.ஆனந்தகிரி ஒன்றாவது தெருவில் ஏராளமான கட்டுமானங்கள் நடக்கும் நிலையில் ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கண்டுக்காத நகராட்சி சுப்ரமணிபால்ராஜ், கவுன்சிலர் , (அ.தி.மு.க.) : வார்டில் இதுவரை ரூ. 40 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனந்தகிரி மூன்றரை தெருவில் சமூக விரோதிகள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் கவுன்சிலராகிய தன்னையே சமூகவிரோதிகள் மிரட்டும் போக்கும் உள்ளது.
போலீசில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனந்திகிரியில் உள்ள சுகாதார வளாகத்தில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதை அப்புறப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லை. சேதமடைந்த வாய்க்கால்களை சீரமைக்க சில ஆண்டுகளாக வலியுறுத்தியும் நகராட்சி செய்து கொடுக்கவில்லை. தெருக்களில் கட்டுமானப் பொருட்கள் குவிப்பதை தடுக்க எச்சரிக்கை செய்து உள்ளேன். மொத்தத்தில் வளர்ச்சி பணிகளில் தனது வார்டு பின்தங்கியுள்ளது என்றார்.