/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ்சில் பற்றிய தீ; அலறி ஓடிய- பயணிகள்
/
அரசு பஸ்சில் பற்றிய தீ; அலறி ஓடிய- பயணிகள்
ADDED : டிச 22, 2025 09:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ் திடீரென தீப்பிடித்தால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டம் போடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இடையே தினசரி பஸ் இயக்கப்படுக்கிறது.
இந்த பஸ், போடி டெப்போவில் இருந்து காலை 9:00 மணி அளவில் புறப்பட்டு காலை 11:20 மணிக்கு திண்டுக்கல் வரும். பின் 40 நிமிட இடைவெளிக்கு பின் புறப்பட்டு அறந்தாங்கி செல்லும்.
அதன்படி நேற்று திண்டுக்கல் வந்த பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சில பயணிகளுடன் அறந்தாங்கி நோக்கி பஸ் புறப்பட தயாரானபோது, முன்பக்க பேனெட்டில் இருந்து கரும்புகை சூழ்ந்து தீப்பிடித்தது. டிரைவர் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். பயணிகளும் இறங்கினர்.
அலுவலர்கள் பஸ்சுக்குள் இருந்த தீயணைப்பான் கருவியைக்கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையே தீயணைப்பு மீட்பு படையினரும் வந்து பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர் என்றனர். தீயணைப்பு துறையினர், 'பஸ்சில் பேட்டரி ஒயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது,' என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

