/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலட்சியத்தால் வீணாகும் ரூ.5.9 கோடி பஸ் ஸ்டாண்ட்
/
அலட்சியத்தால் வீணாகும் ரூ.5.9 கோடி பஸ் ஸ்டாண்ட்
ADDED : செப் 11, 2025 05:05 AM

கன்னிவாடி : கன்னிவாடியில் ரூ. 5.9 கோடியில் கட்டப்பட்ட நவீன பஸ் ஸ்டாண்டை பெருமளவு புறநகர் பஸ்கள் புறக்கணிக்கும் நிலையில் பேரூராட்சி நிர்வாக அலட்சியத்தால் வருவாய் இழப்பு மட்டுமின்றி பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
கன்னிவாடி வழியே காமலாபுரம்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியினரின் போக்குவரத்து வசதிக்காக 40 ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் கோரிக்கை நீடித்தது. அமைச்சர் பெரியசாமி வாக்குறுதிப்படி கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.9 கோடியில் நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
இதற்கான பராமரிப்பு பொறுப்புகள், கன்னிவாடி பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இங்கு 30க்கு மேற்பட்ட கடைகள், பயணிகள், டிரைவர், கண்டக்டர் காத்திருப்பு அறை, ஒரே நேரத்தில் 10 பஸ்கள் நிற்கும் வகையில் ரேக் , தலா 2 பொது சுகாதார வளாகங்கள், சிறுவர் பூங்காக்கள், குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஆடலுார், பன்றிமலை, தோணிமலை உள்ளிட்ட மலை கிராம பயணிகள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் உள்ளன. 2023ல் இதற்கான திறப்பு விழா நடந்தது. இருப்பினும் இதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் கடும் தொய்வு நிலவுகிறது. அரசியல் பிரமுகர்களும், பேரூராட்சி நிர்வாகமும் இதற்கான நடவடிக்கையை முறைப்படி துரிதப்படுத்த வில்லை என்ற புகார் நீடிக்கிறது.புறநகர் பஸ்கள் புறக்கணிக்கும் சூழலில் அப்பாவி பயணிகளுக்கு அலைக்கழிப்பும் ஏமாற்றமுமே மிஞ்சி உள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டின் முழுமையான பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பயணிகள் அலைக்கழிப்பு பரமசிவம் ,அ.தி.மு.க., நிர்வாகி, கன்னிவாடி : பல மாதங்களாக நீண்ட இழுபறி நிலையில் கட்டுமான பணி இருந்தது. ஒரு வழியாக 2023ல் பணி முடிந்து ஆடம்பர விழா நடத்தி திறந்து வைத்தனர். அடுத்த சில மாதங்களாக மூடி வைக்கப்பட்டது. பல முறை ஒத்திவைக்கப்பட்டு கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு ஏலமும் நடக்கவில்லை. வருவாயும் கிடைக்கவில்லை. சில மாதங்களாக அரசு டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. கோவை, திருப்பூர் செல்லும் தேனி, பழநி வழித்தட பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. முன்னதாக விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இவ்வழியே இயங்கி வந்த அனைத்து புறநகர் பஸ்களும் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் செல்கின்றன. இதனால் புறநகர் பஸ்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இத்தடத்தில் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் வருவதில்லை. வெளிப்புறத்தில் கூட நிற்காமல் செல்கின்றன. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் துாரத்தில் உள்ள முந்தைய பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல வேண்டியுள்ளது.
அறிவிப்போடு போச்சு சிவாஜி, சமூக ஆர்வலர், அச்சாம்பட்டி: வெளிமாவட்ட புறநகர் பஸ்கள் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநில பஸ்களும் இத்தடத்தில் இயங்கின. புறநகர் பஸ்கள் திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியே சுற்றுச்சாலையில் இயக்கப்பட்டு வரும் சூழலில் அனைத்து புறநகர் பஸ்களும் கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்வதாக அறிவித்தனர்.
இதற்கான நடவடிக்கை பெயரளவில் கூட இல்லை. வெளியூர் செல்லும் சுற்று கிராம பயணிகள், செம்பட்டி,ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சென்று அங்கிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். செம்பட்டி-ஒட்டன்சத்திரம் இடையே தனியார் பஸ்களுக்கு ஏதுவாக பல அரசு டவுன் பஸ் டிரிப்களை காலை, மாலை நேரங்களில் நிறுத்திவிட்டனர்.
மாணவர்கள் விபத்து அபாய நிலையில் சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர். டவுன் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டிலும், புறநகர் பஸ்கள் முந்தைய பஸ் ஸ்டாப்பிலும் நின்று செல்கின்றன. முறைப்படுத்தாத பஸ் நிறுத்தங்களால் , பயணிகள் பாதிப்படைகின்றனர். வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் பஸ் ஸ்டாண்டை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-