/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் வரத்து நீர் வழித்தடமிழந்த செங்குளம்
/
ஆக்கிரமிப்பால் வரத்து நீர் வழித்தடமிழந்த செங்குளம்
ஆக்கிரமிப்பால் வரத்து நீர் வழித்தடமிழந்த செங்குளம்
ஆக்கிரமிப்பால் வரத்து நீர் வழித்தடமிழந்த செங்குளம்
ADDED : செப் 13, 2025 04:10 AM

சித்தையன்கோட்டை: சொக்கலிங்கபுரம் செங்குளத்திற்கான வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளாக சுற்றுப்புற நிலத்தடி நீராதாரம் பாதித்துள்ளது.
நீராதார மேம்பாட்டில் அரசு, நீதிமன்றம் உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியம் நீடிக்கிறது. ஆத்துார் ஒன்றியம் போடிக்காமன்வாடி அருகே திண்டுக்கல்-குமுளி ரோட்டோரத்தில் செங்குளம் உள்ளது. 70 ஏக்கருக்கும் கூடுதல் பரப்பிலான இக்கண்மாய் சுற்றிய விவசாய கிணறுகள், ஆழ்துளை குடிநீர் கிணறுகளின் நீராதாரமாகும். பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்த போதும் இத்துறையினர் இதை கண்டுகொள்வதில்லை.
திண்டுக்கல்-குமுளி விரிவாக்கப்பட்ட ரோடு பணி, வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு, தடைகளால் வழித்தடங்கள் துார்ந்து கிடக்கிறது.
பொதுப்பணித்துறை வசம் உள்ள நீர் தேக்கத்தின் மேம்பாடு பராமரிப்பில் கடும் தொய்வு நிலவுகிறது.
அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் நீர்தேங்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயம், மணல் திருட்டு, துார்ந்து போன கிளை வாய்க்கால்கள் என பிரச்னைகள் ஏராளம்.
பெயரளவில் மட்டுமே பராமரிப்பில் உள்ள இக் கண்மாயை சுற்றிலும் நிலத்தடி நீர் மட்ட உயர்வு, இப்பகுதி விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் இதன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.
--குறுகும் கண்மாய் கோபி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளர், சித்தையன்கோட்டை: சமீபத்திய மழையால் ராஜவாய்க்காலின் நீர் வரத்து மூலம் பரவலாக இப்பகுதியை சுற்றிய அனைத்து நீர் நிலைகளும் நிரம்புவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் செங்குளம் 30 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வரும் தடம் முழுமையாக மறைந்துள்ளது. வழித்தடங்கள் மட்டுமின்றி கண்மாயின் பெரும்பகுதி சுவடு தெரியாமல் மறைந்து விட்டது. சுற்றுப்பகுதியின் மழை நீர்கூட கண்மாயை வந்தடைய முடியாத சூழல் உள்ளது.
கண்மாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி உள்ளது. வரத்து வாய்க்காலில் பெரும் பகுதி ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டு விட்டது.
கண்மாயின் சுற்றுப்பகுதியில் உள்ள கரை சேதம் அடைந்து ஆக்கிரமிப்பு விவசாயம் அதிகரித்து வருகிறது. குளத்தின் தண்ணீர் தேங்கும் பரப்பும் குறைந்து விட்டது.
கண்மாயை குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர். நோய்களை உருவாக்கக் கூடிய மோசமான சூழலில் கழிவுகள் குவிக்கப்படுகின்றன.
மூடப்பட்ட வரத்து வாய்க்கால் முத்து, விவசாயி, சேடபட்டி : செங்கட்டான்கரடு மலை, காட்டு ஓடை களின் வரத்து நீர் இருந்தது. இதனை மறித்து குமுளி ரோடு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இப் பணியின்போது கண் மாயில் இருந்த மண் பயன்படுத்தினர்.
ஆனால் வரத்து நீருக்கான வழித்தடம் அமைக்கவில்லை. சேகரமாகும் தண்ணீர் வாடிகுளத்திற்கு செல்கிறது.
அழகர்நாயக்கன்பட்டி கண்மாய், சேடபட்டி ஊரூணி மறுகால் போன்ற வரத்து தடங்களும் தடுக்கப்பட்டு மூடப்பட்டு உள்ளன.
விவசாயம் பாதிப்படைந்தது மட்டுமின்றி சுற்றிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரமும் கடும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
அழகர்நாயக்கன்பட்டியில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு குழாய், கால்வாய் அமைந்தால் உபரிநீரால் இக்கண்மாய்க்கு நீர் வரத்து வாய்ப்பு கிடைக்கும்.